சவுதாம்ப்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்து தங்களது இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை எட்டி அசத்தியது. இதன்மூலம் டி20 தொடரில் மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்து இருக்கிறது.
சவுத்தாம்டன் நகரில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜெமி ஸ்மித் மற்றும் பென் டக்கட் அம்பாரமாக விளையாடி ரன்களை குவித்தனர்.

இந்த ஜோடியை கட்டப்படுத்த முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திணறினர். ஜெமி ஸ்மித் 23 பந்துகளில் அரைசதம் அடிக்க, பென் டக்கட் 20 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்தது. ஜெமி ஸ்மித் 26 பந்துகளில் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
இதில் நான்கு பவுண்டரி, 5 சிக்சர்கள் அடங்கும். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பென் டக்கட் 46 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதில் 10 பவுண்டரி, இரண்டு சிக்சர் அடங்கும். முன்னாள் கேப்டன் ஜாஸ் பட்லர் பத்து பந்துகளில் 22 ரன்கள் எடுக்க கேப்டன் ஹாரி புருக் 22 பந்துகளின் 35 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஜாக்கப் பொத்தேல் 4 சிக்ஸர்களை விளாசி 16 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.
இதன் காரணமாக இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க வீரர்கள் எவன் லிவிஸ், ஜான்சன் சார்லஸ் தலா 9 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சாய் ஹோப் மற்றும் சிம்ரன் ஹெட்மயர் ஆகியோர் நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். கேப்டன் சாய் ஹோப் மூன்று சிக்ஸர், 3 பவுண்டரி என 27 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். எனினும் இந்த இரண்டு வீரர்களும் முக்கியமான கட்டத்தில் ஆட்டம் இழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணியின் தோல்வி உறுதியானது.
அப்போதுதான் களத்திற்கு வந்த ரோமன் போவெல் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஒரு மிரட்டலான இன்னிங்சை வெளிப்படுத்தினார். ஒன்பது பவுண்டரி என 45 பந்துகளில் அவர் 79 ரன்கள் குவித்தார். கடைசி வரை ஆட்டம் இழக்காமல் அவர் இங்கிலாந்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார். ரொமரியோ 12 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். எனினும் மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நிற்க தவறியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.