கோஹ்லியை முதலில் வீழ்த்தப் போறேன்... ஜேம்ஸ் ஆண்டர்சன் கனவு பலிக்குமா?
பிர்மிங்ஹாம் : இந்தியா - இங்கிலாந்து இடையே நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்த பின், செய்தியாளர்களிடம் பேசிய ஜேம்ஸ் ஆண்டர்சன், அடுத்த நாள் திட்டங்கள் குறித்து தெரிவித்துள்ளார்.
அப்போது வேடிக்கையாக, “நாங்கள் நாளை முதல் வேலையாக விராட் கோஹ்லியை வீழ்த்துவதாக படுக்கையில் கனவு கண்டு கொண்டு இருப்போம்” என கூறினார் ஆண்டர்சன்.

முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 287 ரன்களும், இரண்டாவது இன்னிங்க்ஸில் 180 ரன்களும் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 274 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்க்ஸில் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடி வருகிறது இந்தியா.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 110 ரன்களுக்கு ஐந்து விக்கெட்கள் இழந்து தடுமாறி வருகிறது. விராட் கோஹ்லி 43 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் இருக்கிறார். வெற்றிக்கு இன்னும் 84 ரன்கள் தேவை என்ற நிலையில் வெற்றி யாருக்கு என்ற விறுவிறுப்புடன் ஆட்டம் தொடர உள்ளது.
இதையடுத்து, இங்கிலாந்து அணி நாளைய சவாலை எப்படி எதிர்கொள்ளும் என ஆண்டர்சன் கூறினார். “இன்று இரவு நன்கு ஓய்வெடுத்து, நாளை புத்துணர்ச்சியோடு திரும்ப வேண்டும். எங்களுக்கு தெரிந்து வெற்றியோ, தோல்வியோ இன்னும் 25-30 ஓவர்களில் தெரிந்துவிடும். எனவே, நாங்கள் எங்களால் முடிந்த அத்தனையும் கொடுக்க வேண்டும். ஒருவேளை, முதல் இன்னிங்க்ஸ் போல கோஹ்லி ஆடினாலும், அவர் டெயில்என்டர்களை ஒரு ஓவரில் ஆறு பந்துகள் சந்திக்க விடுவது கடினமாகும். எங்களுக்கு ஐந்து விக்கெட்கள் வேண்டும். அதை நாங்கள் மிக விரைவாக எடுக்க வேண்டும். இல்லையென்றால், அவர்கள் ரன்களை எடுத்து விடுவார்கள்” என்றார்.
மேலும், “கிரிக்கெட்டில் யாரும் வீழ்த்த முடியாதவர்கள் இல்லை. விராட் கோஹ்லியை நாங்கள் வீழ்த்துவோம்” என்றார். ஸ்லிப் திசையில், விராட் கோஹ்லி கொடுத்த இரண்டு கேட்ச்களை முதல் இன்னிங்க்ஸில் பிடிக்காமல் போனது குறித்து பேசிய ஆண்டர்சன், ஸ்லிப் பீல்டிங்கில் இங்கிலாந்து இரண்டு வருடமாக தடுமாறி வருவதை ஒப்புக்கொண்டார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, களத்தில் கோஹ்லி மற்றும் தினேஷ் கார்த்திக் நிற்கிறார்கள். இவர்களுக்கு அடுத்து ரன் குவிக்கும் திறன் பெற்ற பேட்ஸ்மேன் என்றால் அது ஹர்டிக் பண்டியா மட்டுமே. அவரும், டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவில் அனுபவம் அற்றவர் என்பதால், இந்தியா கோஹ்லி, கார்த்திக் ஆகிய இருவரை நம்பியே உள்ளது.
Story first published: Saturday, August 4, 2018, 15:45 [IST]
Other articles published on Aug 4, 2018


Click it and Unblock the Notifications