டெஸ்டில் ஒரே நாளில் 600 ரன்கள் அடிப்போம்.. இங்கிலாந்து வீரர் சூளுரை
லண்டன் : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி ஒரே நாளில் 600 ரன்கள் அடிக்கும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆலிவ் போப் கூறி உள்ளார். பேஸ் பால் என்ற யுக்தியை பயன்படுத்தி இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டை, டி20 போல் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்து வருகிறது.
அண்மையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கூட இங்கிலாந்து அணி ஒரே நாளில் 400 ரன்கள் அடித்து அசத்தியது. இங்கிலாந்து அணியின் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

அந்த அணி தோல்வியை தழுவதற்கும் இது ஒரு காரணமாக அமைகிறது என்ற விமர்சனம் இருந்துள்ளது. இதுவரை எந்த ஒரு அணியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே நாளில் 600 ரன்கள் அடித்தது கிடையாது. அதிகபட்சமாக 1936 ஆம் ஆண்டு மான்செஸ்டர் நடைபெற்ற இந்தியா- இங்கிலாந்து அணிக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் 2வது நாளில் மட்டும் 582 ரன்கள் அடிக்கப்பட்டது.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து பேசிய இங்கிலாந்து வீரர் ஆலிவ் போப், சில சமயம் நாங்கள் ஒரே நாளில் 250 முதல் 300 ரன்கள் அடிக்கிறோம். அது பரவாயில்லை ஏனென்றால் களத்திற்கு ஏற்ற வகையில் நாங்கள் விளையாடுகிறோம். ஆனால் நீங்கள் பார்த்துக் கொண்டே இருங்கள்! எதிர்காலத்தில் ஒரே நாளில் நாங்கள் 500 முதல் 600 ரன்கள் அடிப்போம். அதை செய்வது நிச்சயம் சிறப்பான ஒரு விஷயமாக இருக்கும்.
டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இதேபோல் அதிரடியாக தான் ஆடப்போகிறோமா என்று நான் ஸ்டோக்சிடம் கேட்டேன். அதற்கு அவர் இல்லை அதிரடியாக ஆடுவது நமது இயல்பான ஆட்டம். அதை தான் நாம் செய்யப்போகிறோம் என்று கூறினார். கடந்த 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தான் எதிரான ராவல்பிண்டி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாளில் 506 ரன்கள் குவித்தது.
இதேபோன்று நடந்து முடிந்த நாட்டிங்காம் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸைமே இங்கிலாந்து அணி 400 ரன்கள் அடித்த முதல் அணி என்ற சாதனையை பெற்றது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications