கிரிக்கெட்டுக்கு 'பை' சொன்னார் இங்கிலாந்து மகளிர் கேப்டன் சார்லட் எட்வர்ட்ஸ்!
லண்டன்: நீண்ட காலமாக இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வந்த சார்லட் எட்வர்ட்ஸ் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
கிடடத்தட்ட 20 வருடமாக கிரிக்கெட் ஆடி வந்தவர் சார்லட் என்பது குறிப்பிடத்தக்கது. 36 வயதான இவர், ஆஷஸ், உலகக் கோப்பை, ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடர் என பல முக்கியப் போட்டிகளுக்குத் தலைமை தாங்கி வழி நடத்தியுள்ளார்.
309 போட்டிகளில் ஆடி உலக சாதனை படைத்தவரும் கூட. அனைத்து வகை போட்டிகளிலும் 10,000 ரன்களுக்கு மேல் குவித்த சாதனையாளரும் கூட.

எல்லோருக்கும் என்னைத் தெரியும்
ஓய்வை அறிவித்த சார்லட் கூறுகையில், எல்லோருக்கும் என்னைத் தெரியும். நான் எந்த அளவுக்கு கிரிக்கெட்டை நேசிக்கிறேன் என்பதை அனைவரும் அறிவர். எனவே இந்த முடிவு எனக்கு எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதையும் அனைவரும் உணருவர்.

நிறைய யோசித்த பின்னர்
நிறைய யோசித்த பின்னர்தான் இந்த கடினமான முடிவை எடுக்க முடிந்தது. பயிற்சியாளர் மார்க் ராபின்சன், அணி இயக்குநர் கிளார் கானர் ஆகியோருடன் விவாதித்த பின்னரே இந்த முடிவுக்கு வந்தேன்.

20 வருட இனிமை
20 வருடம் இங்கிலாந்து அணிக்காக எனது பங்களிப்பைக் கொடுத்துள்ளேன். மிகவும் பெருமையாக உணர்கிறேன். இன்று நமது அணி இருக்கும் இடம் பெருமை தருகிறது. வீராங்கனையாக, கேப்டனாக இதில் எனக்கு மகிழ்ச்சியே என்றார் அவர்.

கேப்டன் 220
இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டனாக 220 போட்டிகளில் பணியாற்றியவர் சார்லட். அதில் 2008, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் ஆசஷ் தொடரை இங்கிலாந்து வென்றது என்பது சார்லட்டுக்குத் தனிப்பட்ட பெருமையும் கூட.

உலகக் கோப்பையும்
அதேபோல 2009ல் ஒரு நாள் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையையும் சார்லட் தலைமையில் இங்கிலாந்து அணி வென்றது.

ஐசிசி கவுரவம்
2008ம் ஆண்டின் சிறந்த ஐசிசி வீராங்கனை விருதையும் வென்றுள்ளார். 2014ல் விஸ்டன் கிரிக்கெட்டர் ஆப் தி இயர் விருதைப் பெற்றுள்ளார்.

உள்ளூர்ப் போட்டிகளில் ஆடுவார்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சார்லட் ஓய்வு பெற்று விட்டாலும் கூட தொடர்ந்து உள்ளூர்ப் போட்டிகளில் அவர் ஆடுவார். கேன்ட், சதர்ன் வைபர்ஸ் ஆகிய அணிகளின் கேப்டனாக இருக்கிறார் சார்லட்.


Click it and Unblock the Notifications