397 ரன்கள் குவித்து ஆப்கனை புரட்டிய இங்கிலாந்து..150 ரன்களில் வெற்றி.. புள்ளி பட்டியலில் முதலிடம்
Recommended Video
மான்செஸ்டர்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து,150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
உலகக் கோப்பை தொடரின் 24வது லீக் போட்டியில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக வின்ஸ், பெயர்ஸ்டோவ் களமிறங்கினர். வின்ஸ் 26 ரன்களிலும், பெயர்ஸ்டோவ் 90 ரன்களிலும் அவுட்டாகினர்.
இங்கிலாந்து கேப்டன் மார்கன் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை அடித்து துவைத்து காய விட்டார். மார்கன் 71 பந்துகளில் 4 பவுண்டரி, 17 சிக்சர்கள் விளாசி 148 ரன்கள் குவித்தார். ஒரு நாள் போட்டியில் தனிநபர் அடித்த அதிக பட்ச சிக்சர்கள் இதுவாகும்.

சரவெடி மார்கன்
மார்கன் அதிரடியால் இங்கிலாந்து அணியின் ரன் மளமளவென உயர்ந்தது. இங்கிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்துள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஒரு அணி எடுத்த அதிகப்பட்ச ரன் இதுவாகும்.

மோசமான பந்துவீச்சு
இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு மிக மோசம். நட்சத்திர பந்து வீச்சாளரான ரஷித் கானின் கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத போட்டியாக இருக்கும். 9 ஓவர்கள் வீசிய அவர், 110 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அதில் 11 சிக்சர்கள் விட்டுக் கொடுத்திருக்கிறார். மிக மோசமான பந்துவீச்சாகும்.

நூர் அலி அவுட்
இமாலய இலக்கை நம்பிக்கை இன்றி துரத்தியது ஆப்கானிஸ்தான். நுார் அலி, குல்பதீன் ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. ரன் கணக்கைத் துவக்காத நுார் அலி, ஆர்ச்சர் பந்தில் போல்டானார். கேப்டன் குல்பதீன் 37 ரன் எடுத்தார்.ரஹ்மத் 46, அஸ்கர் 44 ரன்கள் எடுக்க, முகமது நபி 9 ரன் எடுத்தார்.

இங்கிலாந்து வெற்றி
சற்று தாக்குப்பிடித்த ஹஸ்மதுல்லா 76 ரன்கள் எடுத்து திரும்பினார். நஜிபுல்லாவும் நிலைக்க வில்லை. ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 247 ரன்கள் மட்டும் எடுத்தது. 1975க்குப் பின் உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி இமாலாய வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தையும் இங்கிலாந்து பிடித்தது.


Click it and Unblock the Notifications