பெங்களூரு: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இலங்கை அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். பெங்களூரு மைதானம் பேட்டிங் பேரடைஸ் என்பதால், பெரிய இலக்கை நிர்ணயிக்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது வெளிப்படையாக தெரிகிறது.

1999ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பின் இலங்கை அணியை இங்கிலாந்து அணி ஒருமுறை கூட வீழ்த்தவில்லை. 4 போட்டிகளில் விளையாடி நான்கிலும் தோல்வியடைந்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணி வரலாற்றை மாற்றுமா என்ற கேள்வியுடன், வெற்றிப்பாதைக்கு திரும்புமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர் பேசுகையில், முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். ஆடுகளம் உலர்வாக இருப்பதால், பேட்டிங் செய்து நல்ல இலக்கை நிர்ணயிக்க வேண்டும். நாங்கள் எங்களின் தரத்திற்கான ஆட்டத்தை இதுவரை விளையாடவில்லை. அதுபற்றி நிறைய பேசிவிட்டோம். இது வேலையில் காட்டுவதற்கான நேரம். அணியாக சிறந்த மனநிலையில் உள்ளோம். நிச்சயம் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடாததால் விரக்தி உள்ளது.
ஆனால் தனித்துவமாகவும், குழுவாகவும் தரமாக இருக்கிறோம். இன்றைய ஆட்டத்தில் 3 மாற்றங்களை செய்திருக்கிறோம். டாப்லீ காயமடைந்த விரல்களுடன் நாடு திரும்பிவிட்டார். வோக்ஸ், மொயின் அலி மற்றும் லிவிங்ஸ்டன் மூவரும் இன்று பிளேயிங் லெவனிக்கு திரும்பியுள்ளனர். அதேபோல் அட்கின்சன் மற்றும் ஹாரி ப்ரூக் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டிஸ் கூறுகையில், நாங்களும் பேட்டிங் செய்யவே விரும்பினோம். கேப்டன்சியை மகிழ்ச்சியாகவே செய்கிறேன். சக வீரர்களிடம் இருந்து ஆதரவும் உள்ளது. சில அறிவுரைகளும் வருகிறது. பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக பந்துவீச வேண்டும். இன்றைய ஆட்டத்தில் அனுபவ வீரர் மேத்யூஸ் மற்றும் குமாரா இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.