20-20 உலகக் கோப்பை கிரிக்கெட்- இன்று இந்தியா - பாக். மோதல்
ஜோகன்னஸ்பர்க்:
20-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இன்று இந்தியாவும், பாகிஸ்தானும் அணல் பறக்கும் ஆட்டத்தில் சந்திக்கவுள்ளன. முதலாவது உலகக் கோப்பையைப் பெறப் போகும் பெருமை யாருக்குக் கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த 11ம் தேதி 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தெடாங்கியது. இந்தப் போட்டியில் 12 நாடுகள் பங்குபெற்றன.முதல் சுற்றிலேயே மேற்கு இந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, கென்யா ஆகிய அணிகள் தோல்வியடைந்து நாடு திரும்பின.
அடுத்து நடைபெற்ற சூப்பர்-8 சுற்றின் முடிவில் போட்டியின் துவக்கத்தில் இருந்து தோல்வி அடையாமல் தொடர்ந்து வெற்றி வாகை சூடிய தென்ஆப்பிரிக்கா, இந்தியாவிடம் தோல்வி அடைந்ததால் சூப்பர்-8 போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது.
அத்துடன் இங்கிலாந்து, இலங்கை வங்காளதேசம் அணிகளும் வெளியேற்றப்பட்டன.
அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தையும், இந்திய அணி பலமிக்க ஆஸ்திரேலியாவையும் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இன்று நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அதிரடி மோதலைக் காண இரு நாட்டு ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.
இரு அணிகளிலும் பலமான வீரர்கள் உள்ளனர். இந்தியாவில் யுவராஜ் சிங், டோணி ஆகியோர் சூப்பர் ஃபார்மில் உள்ளனர். குறிப்பாக யுவராஜ் சிங் பின்னிக் கொண்டிருக்கிறார். இந்திய அணியின் இளம் வீரர்கள் அனைவரும் சரியான ஃபார்மில் உள்ளனர்.
அதேபோல பாகிஸ்தான் அணியில், அதிரடி ஆட்டக்காரராக அப்ரிடி பயமுறுத்திக் கொண்டிருக்கிறார். கேப்டன் சோயப் மாலிக்கும் பயமுறுத்துகிறார்.
இந்திய அணி இதுவரை உலகக் கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தாநிடம் தோற்றதில்லை. எனவே இன்றைய இறுதிப் போட்டியில் இந்தியாவே வெல்லும் என்ற நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் பலம் மிக்க தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவை ஜஸ்ட் லைக் தட் இந்தியா சுருட்டி விரட்டியுள்ளதால், பாகிஸ்தானை எளிதில் தோற்கடிப்போம் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உள்ளது.
இந்திய அணி டாஸ் வென்று, முதலில் பேட்டிங் செய்தால் நிச்சயம் நமக்குத்தான் வெற்றி என்பது கிரிக்கெட் பண்டிட்டுகளின் கணிப்பு.
இந்திய நேரப்படி மாலை 5-30 மணிக்கு ஜோகன்ஸ்பர்க்கில் போட்டி தொடங்குகிறது. இந்தியா-பாகிஸ்தான் மோதும் இறுதிப்போட்டி இஎஸ்பிஎன் மற்றும் ஸ்டார் கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இன்றைய இறுதிப் போட்டியில் யார் வென்றாலும், முதலாவது 20-20 உலகக் கோப்பையை வென்ற பெருமை ஆசியாவுக்குக் கிடைக்கும். அதேசமயம், இந்தியா வென்றால், கபில் தேவிடம் மட்டுமே இருக்கும் உலகக் கோப்பை சாம்பியன் பட்ட பெருமை, டோணிக்கும் கிடைக்கும்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:29 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications