ஓய்வு பெற்ற பிறகும் பந்துவீச்சில் கலக்கி வரும் அஸ்வின்.. இருந்தும் EPL T20 தொடரில் தொடர்ந்து தோல்வி
டுபிளின்: ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் 2026 தொடரில் டப்ளின் கார்டியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், தனது சிறந்த பந்துவீச்சைத் தொடர்ந்து வருகிறார். செப்டம்பர் 5 அன்று நடைபெற்ற ஆம்ஸ்டர்டாம் பிளேம்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ஆபத்தான பேட்ஸ்மேனான டிம் டேவிட்டை அவர் வீழ்த்தினார்.
இப்போட்டியில் டாஸ் வென்ற டப்ளின் கார்டியன்ஸ் கேப்டன் அஸ்வின், முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். முதலில் பேட்டிங் செய்த ஆம்ஸ்டர்டாம் பிளேம்ஸ் அணி, 8-வது ஓவரில் 73 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சிறந்த தொடக்கத்தைப் பெற்றது. அப்போது டிம் டேவிட் களமிறங்கினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட், 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 25 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து நிதானமாக விளையாடி வந்தார்.

இருப்பினும், அஸ்வின் வீசிய லூப் டெலிவரியில் பெரிய சிக்ஸர் அடிக்க முயன்ற டிம் டேவிட், லாங்-ஆன் எல்லையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அஸ்வின் தனது 4 ஓவர்களில் 1/18 என்ற சிறப்பான பந்துவீச்சுப் புள்ளிவிவரங்களுடன் ஆட்டத்தை முடித்தார். இதன் மூலம் ஆம்ஸ்டர்டாம் பிளேம்ஸ் அணியை 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களுக்குள் டப்ளின் கார்டியன்ஸ் அணி கட்டுப்படுத்தியது.
இத்தொடரில் 39 வயதான அஸ்வின் சிறந்த ஃபார்மில் உள்ளார், இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 31.25 சராசரி மற்றும் 6.25 எகானமியில் 4 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். இருப்பினும், நடப்பு ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் 2026 தொடரில் டப்ளின் கார்டியன்ஸ் அணி தொடர்ந்து ஐந்தாவது தோல்வியைத் தழுவுவதைத் தடுக்க முடியவில்லை. 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டப்ளின் கார்டியன்ஸ் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இலக்கை துரத்திய போது டப்ளின் கார்டியன்ஸ் அணி 8 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. ஜேம்ஸ் வின்ஸ் 46 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தபோதிலும், நடுவரிசை பேட்டிங் சரிவு அந்த அணிக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. பேட்டிங்கில் சொதப்பிய அஸ்வின், 2 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இத்தொடரில் ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யாத ஒரே அணியாக டப்ளின் கார்டியன்ஸ் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.டப்ளின் கார்டியன்ஸ் அணி தனது அடுத்த போட்டியில், செப்டம்பர் 9 புதன்கிழமை அன்று இரண்டாவது இடத்தில் உள்ள பெல்ஃபாஸ்ட் வுல்வ்ஸ் அணியை எதிர்கொண்டு தனது முதல் வெற்றியைப் பதிவு செய்ய முயற்சிக்கும்.


Click it and Unblock the Notifications


