நான்கு முறை தற்கொலைக்கு முயன்ற ஆஸ்திரேலிய பிரபல கிரிக்கெட் வீரர்.. சுய சரிதை புத்தகத்தில் பகீர்
சிட்னி: நான்கு முறை தற்கொலைக்கு முயன்றதாக பிரபல ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹக் தனது சுய சரிதை புத்தகத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஷேன் வார்னே ஓய்வுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியில் பிரபலமான ஸ்பின்னராக விளங்கியவர் பிராட் ஹக். 2003, 2007ல் ஆஸ்திரேலியா உலக கோப்பை வென்றபோது அந்த அணியில் இடம் பிடித்தவர் பிராட் ஹக்.

இவரது சுய சரிதை "The Wrong 'Un" என்ற பெயரில் வெளியாகியுள்ளது. அதில் இத்திடுக்கிடும் தகவலை பிராட் ஹக் வெளியிட்டுள்ளார்.
பிராட் ஹக் 2007-08ல் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது மனைவி ஆன்ட்ரியாவுடனான இல்லற வாழ்க்கையை அனுபவிக்க இந்த முடிவை அவர் எடுத்தார். ஆனால், அந்த திருமண உறவு முறிந்தபோது பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார் பிராட் ஹக்.
கிரிக்கெட்டையும் தொலைத்து, திருமண வாழ்க்கையையும், பறிகொடுத்த சோகம் பிராட் ஹக்கை தனிமையில் தள்ளியுள்ளது. மதுவிற்கு பெரும் அடிமையாக மாறியுள்ளார் அவர். அலுவலகத்தில் வேலையில் கவனமே இருப்பதில்லையாம்.
அப்போதுதான், தற்கொலை எண்ணம் அவருக்கு வந்துள்ளது. "போர்ட் பீச் பகுதிக்கு காரில் செல்வேன். காரை நிறுத்தி விட்டு அப்படியே கடலோரம் நடப்பேன். கடலை பார்த்தபடி, அதற்குள் இருக்கும் பாறை மீது ஏறி குதித்து தற்கொலை செய்துவிடலாமென்று நினைப்பேன். பிழைத்தாலும், செத்தாலும், அதை விதியே முடிவு செய்யட்டும் என்று நினைப்பேன். ஆனால் குதிக்க முடியவில்லை. 4 முறை இவ்வாறு காரை எடுத்துக்கொண்டு கடற்கரைக்கு சென்றுள்ளேன். ஆனால் மனது நினைப்பதையெல்லாம், உடல் செய்வதில்லை. நல்ல வேளை நான் தப்பித்தேன்" என்று அப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் பிராட் ஹக்.
தற்போது மீண்டும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதால் பிராட் ஹக் தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்டுவிட்டார். கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்சுக்காக ஆடியபோது இவருக்கு வயது 44. ஐபிஎல் போட்டியில் அதிக வயதில் ஆடிய வீரர் என்ற பெருமையை பெற்றார். இப்போதும் ஆஸ்திரேலிய டி20 தொடரான பிக் பாஷில் ஆடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications