ஏலத்தில் வாங்காத வெறி.. முன்னாள் சிஎஸ்கே வீரர் மரண அடி.. SA20-இல் 33 பந்தில் 64 ரன் குவித்த கான்வே
கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் SA20 லீக் கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டெவான் கான்வே அதிரடியாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 2026 ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத நிலையில், அவர் தனது பேட்டிங் திறமையை நிரூபிக்கும் வகையில் மிரட்டலான ஆட்டத்தை ஆடினார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 2026 ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாத நியூசிலாந்து அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வே, தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரின் முதல் போட்டியிலேயே வானவேடிக்கை காட்டியுள்ளார்.

தென்னாப்பிரிக்க 20 கிரிக்கெட் தொடரின் 4-வது ஆண்டு தொடர் நேற்று தொடங்கியது. இதன் முதல் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் எம்ஐ கேப் டவுன் அணிகள் மோதின. டர்பன் அணிக்காகத் தொடக்க வீரராகக் களமிறங்கிய கான்வே, ஆரம்பம் முதலே அதிரடியைக் காட்டினார்.
வெறும் 33 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 64 ரன்களை விளாசினார். நியூசிலாந்து அணியின் மற்றொரு ஜாம்பவானான கேன் வில்லியம்சனுடன் இணைந்து, பவர்-பிளே ஓவர்களிலேயே அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினார். இவர்கள் இருவரும் இணைந்து 8.3 ஓவர்களிலேயே 96 ரன்களைக் குவித்தனர்.
ஐபிஎல் ஏலமும் கான்வேவின் சறுக்கலும்:
டெவான் கான்வேவிற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. 2022 ஆம் ஆண்டு சென்னை அணி இவரை ரூ.1 கோடிக்கு வாங்கியது. அறிமுக சீசனிலேயே 7 போட்டிகளில் 252 ரன்கள் குவித்தார். 2023இல் 16 போட்டிகளில் 672 ரன்கள் குவித்து சென்னை அணி 5-வது முறையாகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகத் திகழ்ந்தார் கான்வே. 2025இல் மீண்டும் சென்னை அணி இவரை ரூ.6.25 கோடிக்கு போட்டி போட்டு வாங்கியது. ஆனால் அந்த சீசனில் அவர் 6 போட்டிகளில் 156 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த 2026 ஐபிஎல் ஏலத்தில், சென்னை அணி இவரை விடுவித்திருந்தது. ஏலத்தில் இவரது அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்னை அணி உட்பட எந்த அணியும் இவரை ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. இதனால் அவர் 'அன்சோல்ட்' (Unsold) ஆனார். இந்த ஏமாற்றத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவரது நேற்றைய ஆட்டம் அமைந்திருந்தது.
போட்டி முடிவு என்ன?
டெவான் கான்வேவின் அதிரடியால் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் என்ற இமால இலக்கை நிர்ணயித்தது. ஹென்ரிச் கிளாசென், எய்டன் மார்க்ரம் ஆகியோரும் அதிரடியாக ரன் சேர்த்தனர்.
தொடர்ந்து ஆடிய எம்ஐ கேப் டவுன் அணியின் தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் தனி ஆளாகப் போராடி சதம் (113 ரன்கள்) அடித்தார். இருப்பினும், அந்த அணியால் 20 ஓவர்களில் 217 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் கான்வே இடம்பெற்ற டர்பன் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஐபிஎல் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட சில நாட்களிலேயே, கான்வே தனது பழைய ஃபார்முக்குத் திரும்பியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.


Click it and Unblock the Notifications