
ஒருகட்டத்தில் தடுமாற்றம்
சக வீரர்களின் உள்குத்து, அதீத பொறாமை, தலைக்கு மேல் தொங்கும் கத்தி என எல்லாவற்றையும் ஓவர்டேக் செய்து சாதிக்க வேண்டிய பொறுப்பு இந்திய கேப்டன்களிடம் உள்ளது. நவீன கால கிரிக்கெட்டில் இதனை மிகச் சரியாக செய்தது மகேந்திர சிங் தோனி மட்டுமே. இதனால் தான் மிக நீண்ட காலத்திற்கு அவரால் கேப்டனாக கோலோச்ச முடிந்தது. ஆனால், ஒருகட்டத்தில் அவரது நிலையும், சொல்லிக் கொள்ளாமல் கேப்டன் பதவியில் இருந்து விலகும் சூழ்நிலை ஏற்பட்டது தனிக்கதை.

தடுமாறிய கேப்டன் கூல்
மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் கேப்டனாக இருந்த தோனியால், அழுத்தங்களை சிறப்பாக கையாள தெரிந்த தோனியால், ஒருக்கட்டத்தில் அந்த அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லை. மூன்று வடிவ கிரிக்கெட்டிலும், வெற்றி, தோல்வி மாறி மாறி வரத் தொடங்க, டி20 போட்டியில் ஏன் தோற்றோம்? என்று ஆராய்வதற்குள், டெஸ்ட் போட்டியில் தோல்வி. டெஸ்ட் போட்டியை இழந்துவிட்டோமே என்று நினைப்பதற்குள் ஒருநாள் போட்டியில் தோல்வி. எதற்கும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

அளவு கடந்த பிரஷர்
இப்போது அதே போன்றதொரு முத்தரப்பு ஆளுமையாக உருமாற முயற்சித்துக் கொண்டிருக்கிறார் விராட் கோலி. ஆஸ்திரேலியாவில் கடந்த டிசம்பர் - ஜனவரியில் நடந்த அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்தியா வரலாற்றில் இல்லாத அளவுக்கு மோசமாக தோல்வி அடைந்து. வெறும் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி சுருண்டது இந்திய அணி. அதன் பின் கோலி நாடு திரும்ப, ரஹானே கேப்டன் பொறுப்பேற்க, 2- 1 என்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா. இப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி. இந்த தோல்விக்கு பல கிரிக்கெட் வல்லுநர்கள் சொன்ன காரணம் கோலியின் அளவு கடந்த பிரஷர். மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கு கேப்டன், பெர்சனல் வாழ்க்கை, தனது தனிப்பட்ட பேட்டிங் ஃபெர்பாமன்ஸ் என்று கோலி மூன்றையும் பேலன்ஸ் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. பணிச் சுமைகளை பிரிக்கும் போது, கோலியால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதே அவர்களது கருத்து.

தொலைதூரத்தில் கோலி
இந்நிலையில், இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரீம் அளித்துள்ள பேட்டியில், "இந்த ஆண்டின் பிற்பகுதியில் விளையாடவிருக்கும் டி20 உலகக் கோப்பை விராட் கோலியின் கேப்டன் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக இருக்கும். விராட் மீது அழுத்தம் குவிந்து வருகிறது, அவர் இன்னும் ஐ.சி.சி கோப்பையை வெல்லவில்லை என்பது அவருக்குத் தெரியும். எனவே, டி 20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதே அவரது நோக்கம். இந்திய அணி உலகக் கோப்பையை வென்றுவிட்டால், கோலி நிம்மதி பெருமூச்சு விடுவார். ஒருவேளை அதன் முடிவை பொறுத்து, இந்திய அணிக்கு இன்னும் எவ்வளவு காலம் தலைமை தாங்கலாம் என்பதை அவர் முடிவு செய்வார் என்று நினைக்கிறேன். இந்திய அணியின் பெரிய கேப்டன்களின் பட்டியலில் அவரது பெயர் நிச்சயம் இடம்பெறும். ஆனால் கோப்பையை வென்ற கேப்டன்கள் பட்டியலில் அவர் வெகு தொலைவில் இருக்கிறார்.

வெவ்வேறு மனநிலை
"மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் வெவ்வேறு மனநிலை, வெவ்வேறு வளங்கள், வெவ்வேறு சிந்தனை தேவை. அதனால்தான் ஒரே கேப்டன் முன்னிலை வகித்தால், அவரிடமிருந்தும் எதிர்பார்ப்பது மிக அதிகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு வடிவத்திலும் , உங்களுக்கு ஒரு புதிய யோசனைகள் தேவை, அதனால்தான் ஸ்பிலிட் கேப்டன்ஷிப் முறையை பின்பற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











