சூர்யகுமாருக்கு வாய்ப்பே கிடைத்திருக்காது.. இந்தியாவில் பிறந்ததால் அதிர்ஷ்டம்.. பாக். வீரர் கருத்து
மும்பை: இந்திய அணியில் கலக்கி வரும் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தானில் இருந்திருந்தால் விளையாட வாய்ப்பு கூட கிடைத்திருக்காது என முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார்.
இந்திய டி20 அணியின் காப்பான் ஆக தற்போது வலம் வருவது சூர்யகுமார் யாதவ் தான். கடந்த 2022ம் ஆண்டில் அவர் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் சிக்ஸர்கள், பவுண்டரிகள் என அதிரடி மழை ரசிகர்களுக்கு கிடைத்தது.
இதனால் இந்தியாவின் மிஸ்டர் 360 வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார். இதுமட்டுமல்லாமல் 2022ம் ஆண்டு டி20 கிரிக்கெட்டின் நம்பர் 1 வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

3வது சதம்
2022ம் ஆண்டில் எந்த இடத்தில் விட்டாரோ, அங்கிருந்து 2023ம் ஆண்டையும் தொடங்கியிருக்கிறார். இலங்கையுடனான 3வது டி20 போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடி தனது 3வது சதத்தை பூர்த்தி செய்தார். 51 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 112 ரன்களை விளாசினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவுக்கு (4) பின் சூர்யகுமார் (3) இருக்கிறார்.

சல்மான் பட் கருத்து
இந்நிலையில் சூர்யகுமார் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் வித்தியாசமான கருத்தை முன்வைத்துள்ளார். அதில், சூர்யகுமார் யாதவ் 30 வயதில் தான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தியாவில் பிறந்ததால் அவர் அதிர்ஷ்டம் நிறைந்தவர் எனக் கூறுவேன். ஏனென்றால் அவர் மட்டும் பாகிஸ்தானில் பிறந்திருந்தால் நிச்சயம் ஒரு வாய்ப்பை கூட பெற்றிருக்க மாட்டார் எனக் கூறியுள்ளார்.

காரணம் என்ன
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 30 வயது பாலிசி உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதாவது 30 வயதுக்கு மேல் ஒரு வீரர் கடந்துவிட்டால், அவரை சர்வதேச அணிக்குள் அறிமுகம் செய்யமாட்டார்கள். இளம் வீரர்களுக்கே அறிமுகமாக முன்னுரிமை வழங்கப்படும். இதன் அடிப்படையில் பார்த்தால் சூர்யகுமாருக்கு பாகிஸ்தானில் வாய்ப்பு கிடைத்திருக்காது.

ஆச்சரியம்
தொடர்ந்து பேசிய அவர், சூர்யகுமாரின் வேகம் மற்றும் பேட்டிங்கை பார்த்தால், ஒரு பவுலர் என்ன பந்து வீசப்போகிறார் என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்திருப்பது போல உள்ளது. ஏனென்றால் என்ன பவுலிங் என்பதை சரியாக கணித்து எந்த இடத்தில் வேண்டுமானாலும் வளைத்து அடித்து விடுகிறார். இது ஆச்சரியமாக உள்ளதாக சல்மான் பட் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications