முதல் பந்துல இருந்தே அடிப்பாங்க... இது புகழ்ச்சியா? சவாலா?.. 2வது டெஸ்ட் குறித்து ஜோ ரூட் சூசகம்
சென்னை: 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என எதிர்ப்பார்ப்பதாக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.
முதல் டெஸ்டில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்க வேண்டும் என இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் முதல் டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஜோ ரூட், இந்திய அணியின் பலம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தோல்வி
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் முடிவடைந்தது. முதல் டெஸ்ட்டில் இந்தியா 277 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரட்டைச் சதமடித்தார். இது அந்த அணியின் அபார வெற்றிக்கு கைகொடுத்தது.

ரூட்டின் சூசகம்
2வது டெஸ்ட் குறித்து பேசிய ஜோ ரூட், நாளையப் போட்டியில் முதல் பந்தில் இருந்தே இந்திய அணி எங்கள் அணிக்கு அழுத்தம் கொடுப்பார் என நம்புகிறேன். டாஸ் எதுவாக இருந்தாலும் இது நடக்கும். உள்நாட்டில் பல்வேறு சாதனைகளை செய்தவர் கோலி. இந்தத் தொடரின் எதாவது ஒரு தருணத்தில் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும் என கோலி்க்கு நன்றாகவே தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

தொடரும்
இலங்கையில் நடைபெற்ற போட்டியில் எப்படி வெற்றிப்பெற்றோமோ அதேபோல வெற்றியை இந்தியாவுடனும் தொடர விரும்புகிறோம். எப்படிப்பட்ட பிட்சாக இருந்தாலும் சரி, பயமில்லா கிரிக்கெட்டை விளையாடவே நாங்கள் விரும்புகிறோம். முதல் போட்டியை போலவே எதிரணிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையிலே எங்களது அசைவுகள் இருக்கும் என ரூட் தெரிவித்துள்ளார்.

மாற்றம்
2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஸ்டூவர்ட் பிராட் விளையாடுவார் எனக்கூறப்படுகிறது. அதே போல் இந்திய அணியும் பந்துவீச்சில் கவனம் செலுத்தி அதிரடி மாற்றத்துடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications