பாலக்கலே: வங்கதேச அணியின் மிடில் ஆர்டர் வீரர் மெஹதி ஹசன் பந்தை பார்க்காமல் ஓடிய போது, அவரை ரன் அவுட் செய்வதற்கு முன் இலங்கை அணியின் ரஜிதா வம்புக்கு இழுத்து ரன் அவுட் செய்த வீடியோ ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ஆசியக் கோப்பை தொடரில் வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 39 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றிபெற்றது. இதன் மூலம் வங்கதேச அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த இரு அணிகளுக்கு ஏற்கனவே நாகினி டான்ஸ் விவகாரத்தில் பல மோதல்கள் ஏற்பட்டுள்ளது. வங்கதேச அணி வென்றால் அந்த அணி வீரர்கள் நாகினி டான்ஸ் ஆடுவதும், இலங்கை அணி வென்றால் இலங்கை வீரர்கள் நாகினி டான்ஸ் ஆடுவதும் வழக்கமான ஒன்றாக மாறியது. இதனால் இரு அணி வீரர்கள் களத்தில் அடிக்கடி மோதிக் கொண்ட நிகழ்வுகளும் உண்டு. அந்த வகையில் இன்றைய ஆட்டத்திலும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது.
இலங்கை அணியின் ரஜிதா வீசிய 36வது ஓவரின் 3வது பந்தில் ஷாண்டோ அடித்த பந்து ஸ்கொயர் லெக் திசையில் இருந்த ஃபீல்டரின் கைகளுக்கு சென்றது. அதனை பார்க்காமல் எதிர்முனையில் நின்றிருந்த மெஹதி ஹசன் மிராஸ் ரன் எடுக்க ஓடினார். ஆனால் ஷாண்டோ தனது க்ரீஸில் இருந்து கூட வெளிவரவில்லை. இதனால் பந்தை பிடித்த தனஞ்செயா டி சில்வா, நேராக பந்தை பவுலர் ரஜிதாவுக்கு த்ரோ வீசினார்.
அப்போது பந்தை பிடித்து ரஜிதா, வங்கதேச பேட்ஸ்மேன் மெஹதி ஹசன் மிராஸை, மீண்டும் க்ரீஸை நோக்கி ஓடி வந்து பார் என்பதை சொல்லும் வகையில் சிக்னல் செய்து வம்புக்கு இழுத்தார். ஆனால் விக்கெட் போன துயரத்தில் இருந்த மெஹதி ஹசன் மோதலில் ஈடுபடாமல் நடையை கட்டினார். வழக்கமாக மோதலுக்கு முதல் ஆளாக நிற்கும் வங்கதேச வீரர்கள், இன்று மோதலில் இருந்து விலகிச் சென்றது இலங்கை ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.