SL vs IND: "ரோஹித் சர்மா நீக்கம்.. புதிய கேப்டனை தேர்வு செய்த கம்பீர்" பரவும் தகவல்.. உண்மை என்ன?
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா அணியிலிருந்து நீக்கப்படுவார் எனவும், அவருக்கு பதிலாக புதிய கேப்டனை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தேர்வு செய்ய உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. மேலும், விராட் கோலிக்கு முதுகு வலி இருப்பதால் அவரும் பங்கேற்க மாட்டார் என மற்றொரு தகவலும் கூறப்படுகிறது. இவற்றின் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்து பார்ப்போம்.
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 241 ரன்களை சேசிங் செய்தபோது ரோஹித் சர்மா அபாரமாக பேட்டிங் செய்தார். அவர் 44 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தார். அவர் பேட்டிங் செய்து கொண்டு இருந்தபோது அவருக்கு வலது தொடையில் அவருக்கு வலி ஏற்பட்டது. அப்போது இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் அவருக்கு சில மருத்துவ உதவிகளை அளித்தார். அதன் பின்னர் ரோஹித் சர்மா முழுமையாக பேட்டிங் செய்தார்.

இந்த நிலையில், அவர் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன் வலை பயிற்சியில் ஈடுபடவில்லை எனவும், அதனால் அவர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் எனவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. மேலும், ரோஹித் சர்மா ஆடாவிட்டால், அவருக்கு பதிலாக சுப்மன் கில் அல்லது கே எல் ராகுல் ஆகிய இருவரில் ஒருவரை கவுதம் கம்பீர் கேப்டனாக நியமிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. அதே போல, விராட் கோலிக்கும் முதுகில் லேசான வலி இருப்பதால் அவரும் விளையாட மாட்டார் எனவும் சிலர் கூறி வருகின்றனர். ஆனால், இந்த தகவல்கள் எதிலும் உண்மை இருப்பதாக தெரியவில்லை.
இந்திய அணி வட்டாரத்தில் விசாரித்த போது விராட் கோலி வலைப் பயிற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே, அவர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ரோஹித் சர்மாவுக்கு வலது தொடையில் வலி இருந்தது உண்மைதான். அதனால் அவர் பயிற்சியில் அதிகமாக ஈடுபடவில்லை. அதே சமயம், அவர் வலைப்பயிற்சியின் போது மற்ற வீரர்களுக்கு ஆலோசனைகள் அளித்து வந்தார்.
அவர் மிகவும் ஈடுபாட்டுடன் ஒவ்வொரு வீரருடனும் பேசினார். அவர் கேப்டனாக இருக்கப் போவதில்லை என்றால் அவர் சாற்றி விலகியே இருந்திருப்பார். அதை வைத்துப் பார்க்கும்போது அவர் நிச்சயம் மூன்றாவது போட்டியில் விளையாடுவார் என தெரிகிறது.
ரோஹித் சர்மா இதற்கு முந்தைய காலங்களில் இது போல காயம் ஏற்பட்டால் வலைப் பயிற்சியில் ஈடுபடுவதை தவிர்த்து இருக்கிறார். ஏனெனில், பயிற்சியில் மேற்கொண்டு காயம் ஏற்பட்டால் போட்டியில் விளையாட முடியாமல் போகும். அதனால், முன்னெச்சரிக்கையாக பயிற்சி செய்வதை மட்டும் தவிர்ப்பார். இது அனைத்து முன்னணி வீரர்களும் கடைப்பிடிக்கும் நடைமுறைதான். எனவே, ரோஹித் சர்மா மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடவே அதிக வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications