மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக இடம் பெற்று இருக்கும் சூர்யகுமார் யாதவுக்கு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் பதவியை அளிக்க முன் வந்ததாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. ஆனால், இதில் உண்மை இருக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள் விமர்சகர்கள்.
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் மூத்த வீரரான சூர்யகுமார் யாதவ் அதிருப்தி அடைந்தார். அடுத்து தனக்கு கேப்டன் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். அப்படி இல்லை என்றாலும் ரோஹித் சர்மாவின் கீழ் விளையாடுவதில் அவருக்கு பிரச்சனை இல்லை.

ஆனால், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்க எடுத்த முடிவால் அவர் அதிருப்தி அடைந்தார். இந்த நிலையில், அவர் 2025 ஐபிஎல் தொடரில் அணி மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவருக்கு கேப்டன் பதவி அளிக்க முன் வந்ததாக செய்திகள் வெளியானது.
2024 ஐபிஎல் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களுக்கு சாம்பியன் பட்டம் என்று கொடுத்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அளித்து விட்டு, சூர்யகுமார் யாதவை தங்கள் அணிக்கு அழைத்துக் கொள்ள இருப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டு இருந்தது.
இதை சுட்டிக் காட்டும் விமர்சகர்கள் கொல்கத்தா அணி எந்த சூழ்நிலையிலும் தங்களுக்கு கோப்பை வென்று கொடுத்த கேப்டனை அணியை விட்டு நீக்காது என கூறுகிறார்கள். இதற்கு முன் கவுதம் கம்பீர் அந்த அணிக்கு இரண்டு முறை கோப்பை வென்று கொடுத்து இருந்தார். அதன் பின் அவர் ஃபார்ம் அவுட் ஆன போது கூட அவரை அணியை விட்டு நீக்கவில்லை. கம்பீர் தாமாகவே அந்த அணியை விட்டு விலக முடிவு செய்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எப்போதும் தங்கள் அணிக்கு வெற்றி தேடித் தந்த வீரர்களை நீக்காது என்பதால் சூர்யகுமார் யாதவை வேறு ஒரு நட்சத்திர வீரரை அளித்து அணி மாற்றம் செய்வதற்கு வாய்ப்பு இல்லை. அதே சமயம், பணம் கொடுத்து சூர்யகுமாரை வாங்க வாய்ப்பு உள்ளது. ஆனால், உலகின் முன்னணி வீரரான சூர்யகுமாரை மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடன் தக்க வைத்துக் கொள்ளவே முயலும். அவர் அணியில் இருந்து வெளியேற நினைத்தாலும் அவரை சமாதானம் செய்யவே முயற்சி செய்யும்.
ஒருவேளை சூர்யகுமார் யாதவ் அணி மாற விரும்பினாலும் அவரை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் வேறு அணிக்கு அனுப்ப ஒப்புக் கொள்ளாது என கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் ஏலத்தில் பங்கு பெற்று தான் வேற அணிக்கு செல்ல முடியும்.