மகள் பெயரின் அர்த்தம்.. ஃபோட்டோ காட்டச் சொன்ன ரசிகர்கள் - "தந்தை" கோலியின் "நச்" பதில்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன், தனது குட்டி மகள் குறித்து ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. முதன் முதலாக நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இறுதிப் போட்டி வரை இந்திய அணி முன்னேறி இருப்பதால், ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் கோலியின் டெஸ்ட் கேப்டன்ஷிப்பில் இந்திய அணி தலா ஒரு போட்டி தோல்வி அடைந்திருக்கும் நிலையில், இங்கிலாந்து டூர் அவருக்கு கடும் சவாலாக இருக்கப் போகிறது.

கேள்வி பதில்
இந்த நிலையில், கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில், வாசிம் அக்ரம் தொடங்கி, தோனி வரை பலர் தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதில் அளித்திருக்கிறார். குறிப்பாக, கடந்த கால பவுலர்களில், யார் உங்களை அதிகம் பாடுபடுத்தியிருப்பார்? என்ற கேள்விக்கு வாசிம் அக்ரம் என்று பதில் அளித்த கோலி, தோனியுடனான தனது நட்பு நம்பிக்கை, மரியாதை கொண்டது என்று விளக்கமளிக்க அவரது பதில் வைரலானது.

டிவி பார்ப்பேன்
அதேபோல், உங்களின் ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, மனைவி அனுஷ்காவுடன் அமர்ந்து நல்ல டிவி ஷோ பார்ப்பேன் என்று கூறினார். மேலும், அவரது உணவுப் பழக்கம் குறித்து கேட்டதற்கு, இந்திய, சீன உணவுகளும் பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்வேன் என்றார்.

கன்னடம் தெரியாது பாஸ்
அதில் ரசிகர் ஒருவர், 'உங்களுக்கு கன்னடம் பேச தெரியுமா? பேசினால் புரிந்து கொள்வீர்களா? என்று கேள்வி எழுப்பினார். காரணம், ஆர்சிபி அணிக்காக ஆடி வருபவர் விராட் கோலி. ஒருமுறை கூட கோப்பை வெல்லவில்லை என்றாலும், அந்த அணி மீது வெறித்தனமான அன்பை கன்னட ரசிகர்கள் பொழிவார்கள். குறிப்பாக கோலி மீது. இந்த நிலையில், ரசிகர்ளின் கேள்விக்கு விராட் கோலி, "ஸ்வல்பா, ஸ்வல்பா சார். ஆனால், எனக்கு பேசினால் புரியாது' என்று பதில் அளித்துள்ளார்.

கோலி மறுப்பு
அதேபோல், ரசிகர்கள் கோலி - அனுஷ்கா ஜோடியின் மகளான 'வாமிகா' பெயர் காரணம் குறித்தும், குழந்தையின் முகத்தை காட்டும்படியும் கேட்டனர். முதலில் தனது மகளின் பெயருக்கு கோலி அர்த்தம் கூறினார். அதில், "துர்கை கடவுளின் மறுபெயர் வாமிகா" என்றார். அதேசமயம், மகளின் படத்தை காண்பிக்க அவர் மறுத்துவிட்டார். அதற்கு அவர், "சோஷியல் மீடியா என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கும், அதை அவளது விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்கும் முன்பு, எங்கள் குழந்தையை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டாம் என்று ஒரு பெற்றோர்களாக நாங்கள் முடிவு செய்துள்ளோம்" என்று கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications