மும்பை : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் திலக் வர்மா அரைசதம் அடிக்க விடாமல் ஹர்திக் பாண்டியா தடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.பலரும் ஹர்திக் பாண்டியா சுயநலத்துடன் நடந்து கொண்டதாக சாடி இருக்கிறார்கள்.
மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா ரன் ரெட் போன்ற எந்த பிரச்சனையும் இருதரப்பு தொடரில் இல்லாத போது எதற்கு ஹர்திக் பாண்டியா சிக்ஸர் அடித்து திலக் வருமாவின் அரை சதத்தை தடுத்தார் என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஹர்திக் பாண்டியா எப்போதுமே தனிநபர் ஸ்கோரை பார்க்க கூடாது அணியின் ஸ்கோர் தான் முக்கியம். அதை தான் அணி நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் என தோனி ஒரு முறை எனக்கு அறிவுரை கூறியிருப்பதாகவும் அந்த அறிவுரை தான் என் மனதில் இன்னும் நீடிக்கிறது என்று கூறியிருந்தார். ஆனால் அதே தோனி 2017 ஆம் ஆண்டு செய்த சம்பவம் ஒன்று தற்போது வெளியே வந்திருக்கிறது.
தோனி எப்போதுமே இளம் வீரர்களின் சாதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். குறிப்பாக இந்தியா இலங்கை அணிகள் மோதிய ஒரு நாள் தொடரில் நடந்த சம்பவம் தற்போது வைரலாகி இருக்கிறது.அது தோனியின் 300 வது சர்வதேச ஒரு நாள் போட்டி ஆகும். அதில் தோனி 48 ரன்களில் களத்தில் இருந்தார். எதிர் முனையில் மனிஷ் பாண்டே 49 ரன்கள் உடன் இருந்தார்.
தோனி அந்த இரண்டு ரன்கள் எடுத்திருந்தால் தன்னுடைய நூறாவது சர்வதேச அரை சதத்தை தோனி எட்டிருப்பார். ஆனால் எதிர்முனையில் இருந்த மணிஷ் பாண்டே ஒரு அரை சதம்தான் இதுவரை அடித்திருக்கிறார். இதனால் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக தோனி சிங்கில்ஸை மட்டுமே எடுத்து மணிஷ் பாண்டேக்கு வாய்ப்பு கொடுப்பார்.
இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத மனிஷ் பாண்டே, எஞ்சிய பந்தை பயன்படுத்திக் கொண்டு அரை சதம் எடுத்து இருப்பார். இதேபோன்று ஐபிஎல் தொடரில் ஒரு முறை டுபிளசிஸூம், தோனியும் 48 ரன்களில் இருந்த போது சிஎஸ்கே அணிக்கு இரண்டு ரன்கள் தான் தேவையாக இருந்தது. கைவசம் 16 பந்துகள் இருந்தது.இதனால் ஒரு ரன்னை மட்டும் சிங்கிளாக எடுத்துக் கொண்ட தோனி டுப்ளசிஸ் அரை சதம் எடுக்க வாய்ப்பை கொடுத்தார்.இதனை தற்போது நினைவுபடுத்தி தோனியின் மனசு இங்கு யாருக்கும் வராது என ரசிகர்கள் பாராட்டு வருகின்றனர்.