மும்பை : உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டதில் புதிய தகவல் ஒன்றை சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அக்சர் பட்டேல் காயத்தால் தான் அஸ்வின் அணியில் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதை மறுக்கிறார்கள் ரசிகர்கள்.
அக்சர் பட்டேல் காயம் : 2023 உலகக்கோப்பை தொடருக்கு அக்சர் பட்டேல் ஆசிய கோப்பை தொடருக்கு முன்பே தேர்வு செய்யப்பட்டு விட்டார். ஆசிய கோப்பை தொடரிலும் ஆடினார். ஆனால் அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. காயத்துடன் ஆடிய அவரது ஆட்டம் பலராலும் பாராட்டப்பட்டது.

மாற்று வீரர் : அப்போது அவர் காயம் குணமாக சில வாரங்கள் ஆகும் என்ற நிலையில், அடுத்து நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு அஸ்வின் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டார். அப்போதே அஸ்வின் தான் உலகக்கோப்பை அணியில் இடம் பெறப் போகிறார். அக்சர் பட்டேல் பெற மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகத் தொடங்கின.
உலகக்கோப்பை அணி அறிவிப்பு : அதே போல, உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் இறுதிப் பட்டியல் வெளியான போது அதில் அக்சர் பட்டேல் நீக்கப்பட்டார். அஸ்வின் அவருக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார். அக்சர் பட்டேல் காயம் காரணமாக நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அக்சர் பட்டேல் நிலை என்ன? : ஆனால், உண்மையில் அக்சர் பட்டேல் நிலை குறித்து உலகக்கோப்பை அணி அறிவிக்கப்படும் வரை பிசிசிஐ எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அவர் பசி-யிடம் தன்னால் உலகக்கோப்பை போட்டிகளின் போது காயத்தில் இருந்து குணமாகி பங்கேற்க முடியும் என கூறியதாக சில அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வலம் வருகின்றன.
ரசிகர்கள் மறுப்பு : அது உண்மை என்றால், எப்படி அவரை அணியில் இருந்து நீக்க முடியும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பலரும் அஸ்வினை சேர்க்க வேண்டும் என்ற முடிவை எடுத்த பின்னரே அக்சர் பட்டேலுக்கு காயம் என பிசிசிஐ நாடகம் ஆடியதாக கூறுகிறார்கள். பலரும் கடந்த சில மாதங்களில் அக்சர் பட்டேல் ஆடிய போட்டிகளின் செயல்பாடுகள், ஐபிஎல் செயல்பாடுகளை பட்டியலிட்டு அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.