சென்னை: "சச்சின் டெண்டுல்கர் மட்டும் 16 வயசுல இந்திய அணிக்கு ஆடலையா? அப்புறம் ஏன் இந்தச் சின்ன பையனை மட்டும் காக்க வைக்கிறீங்க?" - என வைபவ் சூர்யவன்ஷி குறித்து பிசிசிஐ-க்கு நறுக் கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்.
இந்திய கிரிக்கெட்டில் இப்போது எங்கு திரும்பினாலும் ஒரே பேச்சு... அது வைபவ் சூர்யவன்ஷி என்ற 14 வயது அதிரடி கிரிக்கெட் வீரரைப் பற்றித்தான். உள்ளூர் போட்டிகள், சர்வதேச அளவிலான அண்டர் 19 போட்டிகள், ஐபிஎல் என செல்லும் இடம் எல்லாம் பவுலர்களைப் பந்தாடி வரும் இந்தத் இளம் வீரரை, உடனடியாக இந்திய சீனியர் அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பிசிசிஐ-க்கு வலியுறுத்தியுள்ளார். இதற்கு அவர் சுட்டிக்காட்டும் உதாரணம் சச்சின் டெண்டுல்கர்.

வைபவ் சூர்யவன்ஷியின் வளர்ச்சியை பற்றி தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், "சச்சின் டெண்டுல்கர் எப்படி இளம் வயதிலேயே முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினாரோ, அதே போன்ற ஒரு திறமையை வைபவ்விடமும் பார்க்க முடிகிறது" என்று கூறியுள்ளார்.
"நிறைய பேர் சொல்றாங்க, 'அவனுக்கு வயசு கம்மி, இன்னும் கொஞ்ச நாள் போகட்டும், அனுபவம் வரட்டும்'னு. ஆனா நான் கேக்குறேன், சச்சின் சின்ன வயசுல ஆடலையா? அவரும் எல்லா லெவல்லயும் செஞ்சுரி அடிச்சுட்டுதானே இந்திய அணிக்கு வந்தார்? அதே வாய்ப்பை ஏன் வைபவ்வுக்கு கொடுக்கக் கூடாது? ஒயிட் பால் கிரிக்கெட்டில் இவரை இப்போவே ஃபாஸ்ட் ட்ராக் பண்ணி உள்ள கொண்டு வரணும்" என்று அதிரடியாகப் பேசியுள்ளார் ஸ்ரீகாந்த்.
ஸ்ரீகாந்த் இப்படிப் பேசுவதற்கு முக்கியக் காரணம், சமீபத்தில் விஜய் ஹசாரே டிராபியில் வைபவ் ஆடிய ஆட்டம்தான். அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான போட்டியில், வெறும் 84 பந்துகளில் 190 ரன்களை விளாசித் தள்ளினார் வைபவ். 15 சிக்ஸர்கள், 36 பந்துகளில் சதம் என அவர் ஆடிய ஆட்டம், சும்மா வீடியோ கேம் பார்ப்பது போல் இருந்தது.
"எதிரணி பலவீனமானதுதான்... இல்லைன்னு சொல்லல. ஆனா, அந்த பையன் அடிக்கிற ஷாட்ஸ், அவனது பவர், டெக்னிக் எல்லாமே வேற லெவல். ஐபிஎல், அண்டர்-19 என எங்க போனாலும் சதமா அடிக்கிறான். இவன் கிட்ட பெரிய திறமை இருக்கு" என்று சிலாகித்துள்ளார் ஸ்ரீகாந்த்.
"நான் போன வருஷமே சொன்னேன்.. 2026 டி20 உலகக்கோப்பைக்கு இவனை தயார் பண்ணுங்கன்னு. இப்போ அதுக்கு நேரமில்லாம போகலாம். ஆனா, இனியும் தாமதிக்காதீங்க. திறமையான வீரர்களை காத்திருக்க வைப்பதில் அர்த்தமில்லை" என்பது ஸ்ரீகாந்தின் வாதம்.
ஸ்ரீகாந்த் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. வைபவ் சூர்யவன்ஷியின் அண்டர்-19 ஒருநாள் போட்டிப் புள்ளிவிவரங்கள் பிரமிக்க வைக்கின்றன. அவர் 15 போட்டிகளில் ஆடி இருக்கிறார். அதன் பேட்டிங் சராசரி - 51.13; ஸ்ட்ரைக் ரேட் - 158.79; சதங்கள் - 2; அரைசதங்கள் - 3 ஆகும்.
சச்சினைப் போலவே இளம் வயதில் பவுலர்களைத் திணறடிக்கும் வைபவ், இந்திய அணியின் ஜெர்சியை விரைவில் அணிவாரா? ஸ்ரீகாந்தின் கோரிக்கைக்கு தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் செவிசாய்ப்பாரா?