FIFA WC: 20 வயது இளம் புயல் மன்சாம்பி அதிரடி.. போஸ்னியாவை 4-1 என வீழ்த்தி சுவிட்சர்லாந்து வெற்றி
லாஸ் ஏஞ்சல்ஸ்: 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா அணிக்கு எதிரான குரூப் பி பிரிவு லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி 4-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் மாற்று வீரராகக் களமிறங்கிய 20 வயது இளம் வீரர் ஜோஹான் மன்சாம்பி அடித்த அதிரடி இரட்டை கோல்களால் சுவிட்சர்லாந்து அணி எளிதாக வென்றது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் சுவிட்சர்லாந்து மற்றும் போஸ்னியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் 70 நிமிடங்கள் வரை போஸ்னியா அணியின் பலமான தடுப்பாட்டத்தை உடைக்க முடியாமல் சுவிட்சர்லாந்து வீரர்கள் திணறினர். அப்போது கோல் அடிக்க முடியாமல் போனது.

ஆனால், ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் 20 வயது இளம் வீரர் ஜோஹான் மன்சாம்பி மாற்று வீரராகக் களமிறங்கியதும் ஆட்டத்தின் போக்கு முற்றிலும் மாறியது. மன்சாம்பி களமிறங்கிய அடுத்த 3 நிமிடங்களிலேயே (74வது நிமிடம்) ஒரு சிறப்பான வாலி கோல் அடித்து சுவிட்சர்லாந்தை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். தொடர்ந்து ரூபன் வர்காஸ் 2வது கோலை அடிக்க, சுவிட்சர்லாந்து அணி ஆட்டத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. சிறிது நேரத்திலேயே மன்சாம்பி தனது தனிப்பட்ட 2வது கோலை அடித்து அசத்தினார்.
ஆட்டத்தின் இறுதி நேரத்தில் போஸ்னியா அணியின் எர்மின் மஹ்மிக் ஒரு ஆறுதல் கோல் அடித்தார். மேலும் போஸ்னியா வீரர் ஒருவர் ரெட் கார்டு பெற்று வெளியேறியதால் அந்த அணி 10 வீரர்களுடன் விளையாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனைப் பயன்படுத்திய சுவிட்சர்லாந்து கேப்டன் கிரானித் சாகா பெனால்டி வாய்ப்பு மூலம் ஒரு கோல் அடிக்க, சுவிட்சர்லாந்து 4-1 என்ற கணக்கில் இமாலய வெற்றி பெற்றது.
ஜெர்மனியின் ப்ரீபர்க் கிளப் அணிக்காக விளையாடும் மன்சாம்பி, இந்த உலகக் கோப்பையில் சுவிட்சர்லாந்து அணியின் மிகக் குறைந்த வயது வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியைத் தொடர்ந்து குரூப் பி பிரிவில் 4 புள்ளிகளுடன் சுவிட்சர்லாந்து வலுவான இடத்தில் உள்ளது.
ஜூன் 24 அன்று வான்கூவரில் கனடாவுக்கு எதிராக நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் சுவிஸ் அணி 1 புள்ளி பெற்றால் கூட அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். தோல்வியடைந்த போஸ்னியா அணி அடுத்த சுற்றின் வாய்ப்பை தக்கவைக்க கத்தாரை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications
