ரியோ: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்றில் பிரேசில் அணிக்கு எதிரான போட்டியின் போது அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினஸ் மைதானத்தில் இருந்த போலீசாருடன் சண்டையிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 2026ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடக்கவுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 48ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கால்பந்து விளையாட்டை உலகம் முழுவதும் கொண்டு செல்ல முடியும் என்பதோடு, அதற்கான வருவாயையும் அதிகரிக்க முடியும்.

இந்த நிலையில் 2026ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நேற்று நடைபெற்றது. பிரேசிலின் மரகானா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பிரேசில் - அர்ஜென்டினா அணிகள் மோதின. இந்த போட்டிக்கு முன்பாக அர்ஜென்டினா மற்றும் பிரேசில் ரசிகர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.
இதனால் மைதானத்தில் பிரேசில் போலீசார் அர்ஜென்டினா ரசிகர்களை கடுமையாக தாக்க தொடங்கினர். இதனால் மைதானத்தில் இருந்த கேப்டன் மெஸ்ஸி தனது அணியினரான ரோட்ரிக்ஸ், எமிலியானோ மார்டினஸ், ஓட்டோமெண்டி, டீ பால் உள்ளிட்ட இன்னும் சில வீரர்களை அழைத்து கொண்டு நேராக மோதல் நடக்கும் இடத்திற்கு எகிறி குதித்து சென்றார்.
அப்போது முதல் ஆளாக உள்ளே சென்ற கோல்கீப்பர் எமிலியானோ மார்டினஸ் அர்ஜென்டினா ரசிகர்களை தாக்கிய போலீசாரின் கைகளில் இருந்த லத்தியை பிடுங்கி அவர்களை தடுத்தார். அதுமட்டுமல்லாமல் கோபமடைந்த லயோனல் மெஸ்ஸி, தங்களது அணியினரை அழைத்து கொண்டு ஓய்வறைக்கு சென்றார்.
இதனால் ஆட்டம் 27 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. இதன்பின் தொடங்கிய ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி சாதனை படைத்தது. இதன் மூலம் கடந்த 70 ஆண்டுகளில் பிரேசில் அணி இரண்டாவது முறையாக சொந்த மண்ணில் வீழ்ந்துள்ளது. அதேபோல் வெற்றிக்கு பின் மெஸ்ஸி உள்ளிட்ட அனைத்து வீரர்களும் ரசிகர்களுடன் இணைந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.