கொழும்பு: வங்கதேச ஏ அணியின் பேட்ஸ்மேன் சவும்யா சர்கார் இந்தியா ஏ அணியின் ஹர்சித் ராணா களத்தில் மோதிக் கொண்ட நிலையில், அவர்களை தமிழக வீரர் சாய் சுதர்சன் சமாதானம் செய்த வீடியோ ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பைத் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதிப் போட்டியில் வங்கதேச ஏ அணியை எதிர்த்து இந்தியா ஏ அணி விளையாடியது. இதில் முதல் பேட்டிங் ஆடிய இந்தியா ஏ அணி 137 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதேபோல் ரியான் பராக் விக்கெட்டை வீழ்த்திய ஹசன் ஷகிப் சிரித்துக் கொண்டே கொண்டாடியது இந்திய ரசிகர்ளிடையே கோபத்தை ஏற்படுத்தியது.

இதன்பின் டெய்லண்டர்களுடன் இணைந்து இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் சிறப்பாக பேட்டிங் செய்தார். சிறப்பாக ஆடிய அவர் 85 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி கேப்டன் யாஷ் துல் விக்கெட்டை வீழ்த்திய வங்கதேச வீரர்கள் ஆக்ரோஷமாக கொண்டாடினர். இறுதியாக இந்திய அணி 49.1 ஓவர்களில் 211 ரன்கள் மட்டுமே குவித்தது.
பின்னர் பேட்டிங் செய்ய வங்கதேச அணி வந்தபோது, இந்திய வீரர்கள் பதிலடி கொடுக்க காத்திருந்தனர். ஆனால் அந்த அணி வீரர்கள் ஒரு விக்கெட் இழப்பிற்குய் 93 ரன்களை சேர்த்தனர். அதன் பின் தொடக்க வீரர் டன்ஸித் ஹசப் 51 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த வங்கதேச பேட்ஸ்மேன்கள் சீட்டுக்கட்டை போல் சரிந்தனர். இந்த நிலையில் களம் புகுந்த சவும்யா சர்கார் யுவராஜ் சிங் டோடியா வீசிய பந்தில் நிகின் ஜோஸிடம் கேட்ச்சானார்.

யாஷ் துல் பேட்டிங் செய்த போது சர்கார் ஆக்ரோஷமாக கொண்டாடியதால், சர்காருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நிகின் ஜோஸ் மற்றும் ஹர்சித் ராணா இருவரும் ஆக்ரோஷமாக கொண்டாடினார்கள். அதிலும் ஹர்சித் ராணாவின் ஆக்ரோஷம் இந்திய ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
இதனால் கோபமடைந்த சவும்யா சர்கார் ராணாவுடன் மோதலில் ஈடுபட முயன்றார். அந்த நேரத்தில் உள்ளே புகுந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் சர்காரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. விராட் கோலியை விடவும் 10 மடங்கு இந்திய ஏ அணி வீரர்கள் ஆக்ரோஷமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.