கொல்கத்தா: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.டோணிக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளதால், பத்து நாட்களுக்கு அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை அணி கலக்கமடைந்துள்ளது.
நேற்று கொல்கத்தா ஈடன்கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் நடந்த மோதலில் சென்னை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியைப் பெற்றது.
இந்தப் போட்டியின்போது, ஷான் பான்ட் வீசிய பந்து டோணியின் கையில் பட்டு காயம் ஏற்பட்டு விட்டது. இதையடுத்து அவருக்கு எக்ஸ்ரே பார்க்கப்பட்டது. அதைப் பரிசோதித்த டாக்டர்கள், 10 நாள் ஓய்வெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதனால் டோணியால் பத்து நாட்கள் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது சென்னை அணிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
டோணிக்கு ஓய்வு தரப்பட்டால் அவருக்குப் பதில் சுரேஷ் ரெய்னா கேப்டனாக செயல்படுவார் எனத் தெரிகிறது. பார்த்தீவ் படேல் விக்கெட் கீப்பர் பணியை கவனிப்பார்.
நாங்க ஏன் தோத்தோம்னா... கங்குலி விளக்கம்
இதற்கிடையே, தங்களது மோசமான பந்து வீச்சால்தான் சென்னை அணியிடம் தோல்வி அடைய நேரிட்டு விட்டதாக கொல்கத்தா அணி கேப்டன் கங்குலி கூறியுள்ளார்.
இதுகுறித்து போட்டியின் முடிவில் கங்குலி கூறுகையில், முதல் 10 ஓவருக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தோம். ஆனால் அதற்கு பிறகு வந்த பத்ரிநாத்தும், டோனியும் நிலைத்து நின்று ஆடி அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்று விட்டனர். எங்களுடைய மோசமான பந்துவீச்சை பயன்படுத்தி சென்னை வீரர்கள் ரன்களை குவித்து விட்டனர்.
இதனால் தோல்வியை சந்தித்து விட்டோம். பேட்டிங்கும் எங்களுக்கு மோசமாக அமைந்து விட்டது. இந்த போட்டியின் பாடத்தை அனுபவமாக எடுத்துக் கொண்டு அடுத்த போட்டியில் சிறப்பாக ஆடுவோம் என்றார் கங்குலி.