சிஎஸ்கே டூ லண்டன்.. இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளராகிறார் ஸ்டீபன் பிளெமிங்
லண்டன்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. சிஎஸ்கே-வில் இருந்து கிளம்பி நேராக லண்டனுக்கு செல்ல இருக்கிறார் ஸ்டீபன் பிளெமிங்.
2026 ஐபிஎல் தொடருக்குப் பின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகினார். தற்போது அவர் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்க உள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் ஏற்பட்ட தோல்விகள் காரணமாக பிரெண்டன் மெக்கல்லம் டெஸ்ட் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அவருக்குப் பதிலாகவே பிளெமிங் தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளார். எனினும், மெக்கல்லம் இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் பயிற்சியாளராகத் தொடர்ந்து நீடிப்பார்.
முன்னதாக இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் ஜோனதன் டிராட், ரிச்சர்ட் டாசன் மற்றும் ஆஸ்திரேலியாவின் டாம் மூடி ஆகியோர் இருந்தனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பயிற்சியாளர் ஆன்டி பிளவர் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜஸ்டின் லாங்கர் ஆகியோர் இந்த பொறுப்பில் ஆர்வம் காட்டாததால், பிளெமிங் இந்த வாய்ப்பை பெற உள்ளார்.
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான பிளெமிங், சிஎஸ்கே அணியை ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான அணியாக மாற்றியவர். மேலும், அமெரிக்காவின் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கும் அவர் தலைமை பயிற்சியாளராகச் செயல்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணி அடுத்த 3 வாரங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. பிளெமிங் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கும் வரை, உதவி பயிற்சியாளர் மார்கஸ் ட்ரெஸ்கோதிக் தற்காலிக பயிற்சியாளராகச் செயல்படுவார் என்று தெரிகிறது. அதன் பிறகு, வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பிளெமிங் முழுமையாகப் பொறுப்பேற்கக் கூடும்.
இங்கிலாந்து அணி 2015-ம் ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் தொடரை வெல்லவில்லை என்பதால், அந்த 10 ஆண்டுகால தாகத்தைத் தீர்ப்பதே பிளெமிங்கின் முதல் சவாலாக அமையும். அதே சமயம், டி20 போட்டிகள் ஆடும் அணிகளுக்கு மட்டுமே பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங் எப்படி ஒரு முன்னணி டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக செயல்படப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications

