கேப்டன் இப்படியா பேசுவது?.. மென்டர் தோனியாவது சொல்ல வேண்டாமா?.. கோலி மீது கபில்தேவ் சாடல்!
டெல்லி: டி20 உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்த இந்தியாவின் மிக மோசமான தோல்வி கடும் கேள்வியை எழுப்பி இருக்கிறது. இரண்டு போட்டிகளிலுமே போராடாமல் அணி தோல்வி அடைந்தது இதற்கு முன்பு நாம் பார்த்திராத ஒன்று.
இந்திய அணி வீரர்கள் தைரியம் இன்றி ஆடியது வெளிப்படையாக தெரிந்தது. கேப்டன் கோலி முதல் ஒவ்வொரு வீரரிடமும் ஒரு பதற்றம் காணப்பட்டது. இதுவே தோல்வியை எளிதாக பெற வழிவகுத்தது.

தைரியத்துடன் ஆடவில்லை
இதைத்தான் நியூசிலாந்து உடனான போட்டி முடிந்த பிறகு கேப்டன் விராட் கோலி கூறி இருந்தார். ''உண்மையை கூறவேண்டுமெனில் நாங்கள் போதிய தைரியத்துடன் ஆடவில்லை. பேட்டிங்கிலும் சரி பவுலிங்கிலும் சரி. பந்து வீச்சைப் பொறுத்தவரை பந்து வீச போதுமான ரன் இலக்கு இல்லை. களத்தில் நுழைந்த போதிலிருந்தே எங்கள் உடல் மொழி சரியில்லை, தைரியமானதாக இல்லை.பேட்டிங்கில் அடித்து ஆட வேண்டும் என்று ஆடிய போதெல்லாம் விக்கெட்டை இழந்தோம்.

பதற்றத்தை உண்டாக்கி விட்டது
இந்திய அணிக்கு ஆடுவதென்றால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை திருப்தி செய்ய வேண்டும். இது அனைவருக்கும் தெரியும். கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து மட்டுமல்ல. வீரர்களிடமிருந்தே எதிர்பார்ப்புகள் இருக்கும். இந்த அதிக எதிர்பார்ப்புகளே பதற்றத்தை உண்டாக்கி விட்டது. இனிமேல் பாசிட்டிவ் மனநிலையில் ஆடுவோம்' என்று கோலி கூறி இருந்தார்.

மிகவும் பலவீனமான கூற்று
இந்த நிலையில் விராட் கோலியின் பேச்சுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், '' வெளிப்படையாக, விராட் கோலியின் அந்தஸ்து கொண்ட ஒரு வீரரிடமிருந்து இது மிகவும் பலவீனமான கூற்று. அணிக்காக ஆட்டங்களை வெல்ல வேண்டும் என்ற பசியும் விருப்பமும் அவருக்கு இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.

மனநிலையை உயர்த்துவது கடினம்
அணியின் உடல் மொழியும், கேப்டனின் சிந்தனை செயல்முறையும் சரியாக இல்லாவிட்டால், டிரஸ்ஸிங் ரூமுக்குள் இருக்கும் வீரர்களின் மனநிலையை உயர்த்துவது மிகவும் கடினம். அணியின் மீதான விமர்சனம் நியாயமானதுதான். வீரர்கள் அதை சமாளிக்க வேண்டும். தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, மென்டர் தோனி ஆகியோர் இதுபோன்ற கடினமான காலகட்டத்தில் அணியை ஊக்குவிக்க தங்கள் அனுபவத்தைப் பயன்படுத்த வேண்டும்'' என்று கபில்தேவ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications