Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கௌதம் கம்பீருக்கு வந்த “3 வார்த்தை” ஈமெயில்.. பயங்கரவாத அமைப்பு மிரட்டல்.. 2 முறை வந்த மெசேஜ்

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளரும், முன்னாள் பாஜக எம்பியுமான கௌதம் கம்பீருக்கு காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாத அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் நகரில் சமீபத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது குடும்பத்தின் பாதுகாப்பைக் கருதி, கௌதம் கம்பீர் டெல்லி காவல் துறையை அணுகி, முறையாகப் புகார் அளித்துள்ளதாக அவரது டெல்லி அலுவலகம் தெரிவித்துள்ளது. கம்பீருக்கு ஈமெயில் மூலம் இந்த மிரட்டல் வந்துள்ளது. அதில், "நான் உன்னைக் கொல்வேன்" என்று மூன்று வார்த்தைகள் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்ததாக சில ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Gautam Gambhir India IPL 2025 IPL

இந்த விவகாரம் குறித்து கம்பீர் அலுவலகம் அளித்துள்ள விளக்கம் - "முன்னாள் பாஜக எம்.பி.யும், இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளருமான கௌதம் கம்பீருக்கு 'ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்' அமைப்பிடமிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. புதன்கிழமை அன்று அவர் டெல்லி காவல் துறையை அணுகி, முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தார். தனது குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் முறைப்படி புகார் அளித்துள்ளார்.".

செவ்வாய்க்கிழமை அன்று, மதியம் மற்றும் மாலை என இரண்டு மிரட்டல் ஈமெயில்கள் கம்பீருக்கு வந்துள்ளன. இரண்டிலும் ஒரே விதமான மிரட்டல் வாசகமே இருந்துள்ளது. கம்பீருக்கு இது போன்ற மிரட்டல்கள் வருவது இது முதல் முறையல்ல. கடந்த 2021 நவம்பரில், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் இதேபோன்ற மிரட்டல் ஈமெயில் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் பிரான்ஸ் நாட்டிற்கு விடுமுறைக்குச் சென்றிருந்த கம்பீர், இந்த மாதத் தொடக்கத்தில் நாடு திரும்பினார். கடந்த மார்ச் மாதம் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியைக் கைப்பற்றிய பிறகு, அவர் பொதுவெளியில் அதிகம் தென்படவில்லை. தற்போது இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் 2025 தொடரில் விளையாடி வருவதால், இந்திய அணி பயிற்சியாளர்களுக்கு இந்த நேரத்தில் ஓய்வு கிடைத்துள்ளது.

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த பல இந்திய விளையாட்டுப் பிரபலங்களில் கம்பீரும் ஒருவர். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன். இதற்குக் காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். இந்தியா பதிலடி கொடுக்கும்." என்று பதிவிட்டிருந்தார்.

பயிற்சியாளராக கம்பீர்:

இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீரின் பயணம் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. தொடக்கத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் தோல்வி, சொந்த மண்ணில் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-3 எனத் தோல்வி எனச் சற்றுச் சறுக்கலுடன் அவரது பதவிக்காலம் தொடங்கியது. அதன்பின், எட்டு ஆண்டுகளாக இந்தியாவிடம் இருந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலியாவிடம் 1-3 என்ற கணக்கில் இழந்தது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. அந்தக் காலகட்டத்தில், இந்திய அணியின் ஓய்வறை உரையாடல்கள் ஊடகங்களுக்குக் கசிந்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இருப்பினும், அதன்பிறகு கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி எழுச்சி பெற்றது. சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு போட்டியில் கூடத் தோல்வியடையாமல் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, கடந்த ஒன்பது மாதங்களில் இரண்டாவது ஐசிசி கோப்பையை இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது வந்துள்ள இந்த கொலை மிரட்டல் சம்பவம், கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்பீர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பு குறித்து காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Story first published: Thursday, April 24, 2025, 10:55 [IST]
Other articles published on Apr 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+