தமிழ் திரையுலகில் களமிறங்கும் எம்.எஸ்.தோனி.. உச்சநட்சத்திரங்களுடன் தீவிர பேச்சுவார்த்தை- முழு விவரம்
மும்பை: தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்கும் பணிகளில் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமான கேப்டனாக வலம் வந்தவர் எம்.எஸ்.தோனி. இவர் கடந்த 2019ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வரும் தோனி, அடுத்தகட்ட நடவடிக்கையாக பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகிறார்.

தோனியின் தொழில்கள்
மதுபானம், ஆடைத்துறை, விவசாயம் என பல்வேறு தொழில்களை செய்து வரும் தோனி, திரைத்துறையிலும் செயல்பட்டு வருகிறார். தோனி எண்டர்டெயின்மண்ட் என்ற பெயரில் பாலிவுட் திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் சென்னை மீதுள்ள காதலால் தமிழ் துறையிலும் கால்பதிக்க திட்டமிட்டுள்ளார்.

தயாரிப்பாளர்
தோனியின் தயாரிப்பில் விரைவில் தமிழ் திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளதாக தெரிகிறது. இதற்காக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் தோனியின் நிறுவனம், பெரிய பட்ஜெட்டில் அந்த திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீவிர பேச்சுவார்த்தை
எம்.எஸ்.தோனி சமீபத்தில் நடிகர் விஜய்-ஐ நேரில் சந்தித்து பேசிய புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டானது. இதே போல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விளம்பர படங்களில் நடித்த தோனி, நடிகை நயன்தாராவிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

3 படங்கள்
தோனியின் தயாரிப்பில் இதுவரை 3 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில் 2 திரைப்படங்கள் கிரிக்கெட் தொடர்பானவை. சிஎஸ்கே அணி 2 வருட தடைக்கு பிறகு மீண்டு வந்தது குறித்து ஒரு திரைப்படமும், உலகக்கோப்பையை வென்றது குறித்து ' தி ப்ளேஸ் டூ க்ளோரி' என்ற ஆவணப்படம் வெளியானது. கடைசியாக தி ஹிடன் ஹின்டு என்ற த்ரில்லர் படம் வெளியாகியிருந்தது.


Click it and Unblock the Notifications