கேரள முன்னாள் கிரிக்கெட் பயிற்சியாளருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை.. மாணவிக்கு பாலியல் வன்கொடுமை
திருவனந்தபுரம்: கிரிக்கெட் பயிற்சி பெற வந்த மைனர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கேரள கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் பயிற்சியாளர் மனுவுக்கு 35 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருவனந்தபுரம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
திருவனந்தபுரம் ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்த 40 வயதான கிரிக்கெட் பயிற்சியாளர் மனு மீது, தனது அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மொத்தம் 6 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் இரண்டாவது வழக்கை விசாரித்த திருவனந்தபுரம் விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஞ்சு மீரா பிர்லா, குற்றவாளி மனுவுக்கு 35 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 66,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் 6 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின்படி, பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 2018 இல் இந்த அகாடமியில் சேர்ந்தார். சிறப்பு உடற்தகுதி பயிற்சி அளிப்பதாகக் கூறி, அந்த மைனர் சிறுமியை ஜிம் மற்றும் குளியலறைக்கு அழைத்துச் சென்று மனு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், மாணவியை ரகசியமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, இதுபற்றி வெளியே கூறினால் கிரிக்கெட் எதிர்காலத்தை முற்றிலும் பாழாக்கிவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன மாணவி 2019 இல் அகாடமியை விட்டு வெளியேறினார்.
ஆண்டுகள் கடந்தாலும் பயத்தின் காரணமாக மாணவிகள் அமைதியாக இருந்தனர். இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பெண்கள் கிரிக்கெட் போட்டியின் போது பயிற்சியாளர் மனுவை மீண்டும் கண்ட ஒரு மாணவி பயத்தில் கதறி அழுதார். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மனுவின் பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. அப்போது தங்களுக்கு நடந்த அநீதியை வெளியே சொல்ல தைரியம் பெற்ற மேலும் 5 மாணவிகள் தனித்தனியாக புகார் அளித்தனர்.
இந்த வழக்குகளில், முதல் வழக்கின் தண்டனைக் காலம் முழுமையாக முடிந்த பிறகே இந்த 2வது வழக்கிற்கான 35 ஆண்டுகள் சிறை தண்டனை தொடங்கும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் குற்றவாளி மனு தனது வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையிலேயே கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
