டெல்லி: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.பி.சிங் தந்தை கொரோனா பாதித்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. தினம் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் அவலம் நிலவுகிறது. குடும்பத்தில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், ஒட்டுமொத்த குடும்பத்தையும் அது பாதிக்கிறது. குறிப்பாக, ஏழை மற்றும் மிடில் கிளாஸ் குடும்பங்களை சாரை சாரையாக தாக்கி வருகிறது.

குறிப்பாக மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கொரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,48,421 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 4,205 பேர் இந்த நோய் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். நோய் தொற்றில் இருந்து 3,55,388 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் தற்போதுவரை 37 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். மேலும், 17.52 கோடி பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் நெருங்கிய நண்பருமான ஆர்.பி.சிங் தந்தை ஷிவ் பிரசாத் சிங் கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்துள்ளார். 2007 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஆர்.பி.சிங். அதுமட்டுமின்றி, திருமணத்திற்கு முன்பு மனைவி சாக்ஷியை விரும்பிய விஷயத்தை தோனி முதன் முதலில் பகிர்ந்து கொண்டதும் ஆர்.பி.சிங்குடன் தான். அந்தளவுக்கு இருவருக்குமான நட்பு நெருக்கமானது. இந்த சூழலில், ஆர்.பி.சிங் தந்தை கொரோனாவால் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆர்.பி.சிங் தனது ட்விட்டரில், "எனது தந்தை ஷிவ் பிரசாத் சிங் காலமானதை ஆழ்ந்த வருத்தத்துடனும் சோகத்துடனும் தெரிவிக்கிறோம். அவர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு மே 12 ஆம் தேதி காலமானார்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு சமூக தளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்