
தீவிர பயிற்சி
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி 1- 0 என முன்னிலை வகிக்கிறது. லார்ட்ஸில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெட்டிங்லேவில் நாளை மறுதினம் (ஆக.25)ம் தேதி தொடங்குகிறது. தோல்வியில் இருந்து மீண்டு வரும் முனைப்பில் இங்கிலாந்து அணி மிகத் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அதேசமயம், இந்திய அணி லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் வெளிப்படுத்திய அதே துடிப்பான ஆட்டத்தை மீண்டும் தொடரும் முனைப்பில் உள்ளது. இதனால், இப்போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இஷாந்துக்கு பதில் அஷ்வின்
இந்த போட்டிக்கான இந்திய அணியில் புஜாரா அல்லது ரஹானேவுக்கு பதிலாக சூர்யகுமார் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதேபோல், லோ ஆர்டரில் ஸ்பின் பவுலிங் ஆல் ரவுண்டராக சேர்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும், பவுலிங்கில் அவரால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. குறைந்தபட்சம் அவரால் தாக்கம் கூட ஏற்படுத்த முடியவில்லை. இதனால், அவருக்கு பதில் ரவிச்சந்திரன் அஷ்வின் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் ஹெட்டிங்லேவில் 3 ஃபாஸ்ட் மற்றும் 2 ஸ்பின் பவுலர்களை கொண்டு இந்திய அணி களமிறங்கலாம் என்றும் தெரிகிறது. அப்படி இருக்குமாயின் இஷாந்த் ஷர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதில் அஷ்வின் சேர்க்கப்படலாம்.

தடுமாறும் பாண்ட்யா
எனினும், இந்த டெஸ்ட் தொடரில் ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர் இல்லாமல் இந்திய அணி சற்று திணறி வருகிறது. இதற்கு முக்கிய காரணம், ஹர்திக் பாண்ட்யா காயத்தில் சிக்கியது தான். இந்திய அணி மலை போல் நம்பியிருந்த ஒரே ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர் இவர் தான். ஆனால், தீராத முதுகு வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த பாண்ட்யா, அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு பந்து வீசுவதற்கு ரொம்பவே சிரமப்பட்டார். ஒருநாள் போட்டிகளில் அவரால் முழுமையாக 10 ஓவர்கள் கூட வீச முடியவில்லை. டி20 போட்டிகளில் மட்டும் 3 அல்லது 4 ஓவர்கள் பந்து வீசி, பேட்டிங் செய்து கொண்டு வந்தார். இதனால் அவர் ஃபிட்டாக இருந்தும் அணியில் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இவருக்கு பதிலாக தான் ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டார். அவரிடம் ஓரளவு பேட்டிங் செய்யும் திறன் இருந்ததால், அணியில் தேர்வு செய்யப்பட்டார். இப்போது அவரும் முதல் டெஸ்ட் போட்டியில் காயத்தில் சிக்க, இந்தியாவுக்கு ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர் என்று எவருமே இப்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இல்லை.

ஒல்லியான உடல் தேகம்
அதேசமயம், ஹர்திக் பாண்ட்யா இலங்கைக்கு சென்ற இந்திய 'ஏ' அணியில் விளையாடினார். ஆனால், அவரால் பேட்டிங்கிலும் ஜொலிக்க முடியவில்லை. பவுலிங்கிலும் ஜொலிக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் ஹர்திக் பாண்ட்யாவிற்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் சில பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதில், "ஹர்திக் பாண்டியாவிடம் இந்தியா அதிக நம்பிக்கை வைத்திருந்தது, ஆனால் அவர் நீண்ட நாட்களுக்கு விளையாட முடியாமல் இருக்கிறார். அவர் பேட்டிங் செய்யும் போது மிகவும் திறமையானவராகத் தெரிகிறார். அவர் காயத்திற்கு முன் பந்துவீசும்போது, டீசண்ட்டான வேகத்தில் மிகவும் திறம்பட பவுலிங் செய்தார். ஆனால் இங்கு ஹர்திக் பாண்டியாவின் பிரச்சனை என்னவென்றால், அவர் மிகவும் ஒல்லியாக இருக்கிறார். இதனால், கூடுதல் பளுவை சுமக்க முடியாமல் அடிக்கடி உடற்தகுதி அற்றவராகிறார்.

பிரச்சனை இருக்கா?
அவருக்கு உடலை இன்னும் மேம்படுத்த வேண்டும். அவரிடம் திறமைகள் கொட்டிக் கிடக்கின்றன. அதிக திறன்களை கொண்டிருக்கிறார். அவர் பேட்டிங் மற்றும் பந்துவீசும் விதம் சிறப்பாக உள்ளது. நல்ல பவுலிங் ஆக்ஷன் உள்ளது. ஆனால், அவரது உடலால் அதிகப்படியான பணிச்சுமையை தாங்க முடியவில்லை. அதைத்தான் இப்போது அவர் சரி செய்ய வேண்டும். நீங்கள் ஹர்திக் பாண்டியாவை கபில் தேவ் அல்லது இம்ரான் கானுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அவர்கள் பாண்ட்யாவை விட மிகவும் ஃபிட்டானவர்களாக இருந்தனர். நீங்கள் அவர்களின் யூடியூப் வீடியோக்களைப் பார்க்கலாம். அவர்கள் பாண்ட்யாவின் உடலை போன்று இரு மடங்கு இருந்தனர். அதிக தசைகள் கொண்டிருந்தனர். ஹர்திக் பாண்டியாவின் உடலமைப்பில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது. ஃபிசியோக்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நிச்சயமாக அவரிடம் இதைப் பற்றி பேச வேண்டும்" என்று ஒரு நீண்ட நெடிய அட்வைஸ்களை சல்மான் பட் அள்ளித் தெளித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











