“அற்பத்தனமாக வைபவ் சூர்யவன்ஷியை கிண்டல் செய்வதை விட்டு ஒழுங்கா..”.. அயூப்-பை வெளுத்த கம்ரான் அக்மல்
இஸ்லாமாபாத்: ஆசிய விளையாட்டுப் போட்டியில் 15 வயது இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷியை களத்தில் கேலி செய்த பாகிஸ்தான் வீரர் சயீம் அயூப்பை, அந்நாட்டு முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் கடுமையாகச் சாடியுள்ளார்.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது. இப்போட்டியின் 3-வது ஓவரில், 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த இந்திய தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை சயீம் அயூப் வீழ்த்தினார். அப்போது வைபவ் பெவிலியன் திரும்பியபோது, அவரது சிறு வயதைக் கிண்டலடிக்கும் விதமாக குழந்தையைத் தொட்டிலில் வைத்து ஆட்டுவது போல கைகளால் சைகை செய்து சயீம் அயூப் கேலி செய்தார்.

ஆனால் அவரது இந்த கொண்டாட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அதே ஓவரில் அடுத்தடுத்து அபிஷேக் சர்மா, சயீம் அயூப் பந்துவீச்சில் 1 சிக்சர், 2 பவுண்டரிகளைப் பறக்கவிட்டு பதிலடி கொடுத்தார். மேலும், சயீம் அயூப் இரண்டு முக்கிய கேட்ச் வாய்ப்புகளையும் தவறவிட்டார். இறுதியில் இந்திய அணி 212 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்து தங்கம் வென்றது. சயீம் அயூப்பின் இந்த செயலுக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய அவர் கூறுகையில், "எங்கள் அணியின் ஆட்டம் தொடர்ந்து படுமோசமாக உள்ளது. ஆனால் வீரர்கள் களத்தில் ஒழுங்காக விளையாடுவதை விட்டுவிட்டு, சமூக வலைதளங்களில் கவனம் பெறுவதற்காக மட்டுமே இத்தகைய அற்ப வேலைகளைச் செய்கிறார்கள். எதிரணி வீரருக்கு 13, 14 அல்லது 15 வயது இருக்கலாம். ஆனால் அவர் சர்வதேச கிரிக்கெட் விளையாடுகிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சயீம் அயூப் ஒன்றும் குழந்தை அல்ல. இதுபோன்ற தேவையில்லாத செயல்களை விட்டுவிட்டு சொந்த ஆட்டத்தில் அவர் கவனம் செலுத்த வேண்டும்" என்று கம்ரான் அக்மல் விளாசியுள்ளார்.


Click it and Unblock the Notifications

