
ஜோ ரூட் 180
லண்டன் லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்கள் எடுத்தது. லோகேஷ் ராகுல் 129 ரன்களும், ரோஹித் ஷர்மா 83 ரன்களும் எடுத்தனர். விராட் கோலி 42 ரன்களும், ஜடேஜா 40 ரன்களும் எடுத்தனர். பிறகு, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் சேர்த்து, இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலைப் பெற்றது. கேப்டன் ஜோ ரூட், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 180 ரன்கள் குவித்தார். ரோரி பர்ன்ஸ் 49 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 57 ரன்களும் எடுத்தனர்.

மீண்டு வந்து வெற்றி
இதையடுத்து, இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. இடையில் புஜாரா - ரஹானே ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர். ரஹானே 61 ரன்களும், புஜாரா 45 ரன்களும் எடுத்தனர். பிறகு, 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த முகமது ஷமி - பும்ரா ஜோடி பிரமாதமாக விளையாடியது. 9வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்கள் குவித்து புது சாதனை படைத்தது. முகமது ஷமி 56 ரன்களும், பும்ரா 34 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷமி மற்றும் பும்ராவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவேயாகும். பிறகு களமிறங்கிய இங்கிலாந்து, 120 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 151 ரன்கள் வித்தியாசத்தில் அதகளமான வெற்றியை பதிவு செய்து, தொடரில் 1 - 0 முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 25ம் தேதி ஹெட்டிங்லேவில் நடைபெறுகிறது.

முழிக்கும் ஹமீத்
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை, ஜோ ரூட் அசைக்க முடியாத பேட்ஸ்மேனாக வலம் வருகிறார். அவரை அவுட் செய்வதற்குள் இந்திய பவுலர்களுக்கு போதும் போதும் என்று ஆகிவிடுகின்றனர். ஆனால், அவரைத் தவிர அந்த அணியில் வேறு எவரும் பேட்டிங்கில் பெரிதாக ஜொலிப்பதில்லை. இங்கிலாந்தின் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்லே ரொம்பவே திணறுகின்றனர். ஒன் டவுன் வீரர் ஹஸீப் ஹமீத் திருவிழாவில் காணாமல் போன குழந்தையைப் போலவே பேந்த பேந்த முழிக்கிறார். தடுமாறுகிறார். பதட்டப்படுகிறார். ஒருவேளை கொஞ்சம் ரன்கள் அடித்து செட் ஆகினால் கலக்குவாரோ என்னவோ!.

அல்லல்படும் பட்லர்
மற்றபடி ஜானி பேர்ஸ்டோ அவ்வப்போது நம்பிக்கை தருகிறார். ஆனால், அவர் சிறந்த டெஸ்ட் வீரர் தானா என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஜோஸ் பட்லர்.. அபாரமான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வீரர். ஆனாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில்..? இதனை இங்கிலாந்தின் பல சீனியர் வீரர்களே கேள்வி எழுப்புகின்றனர். முகத்தை க்ரிப்பாக வைத்திருக்கிறார். பும்ரா பேட்டிங் செய்ய வந்தால் ஸ்லெட்ஜிங் செய்கிறார். ஆனால், பேட்டிங்கில் ஏதாவது செய்வார் என்று பார்த்தால், பரிதாபமாக அவுட்டாகி வெளியேறுகிறார். லோ ஆர்டரில் சுட்டிக் குழந்தை சாம் கர்ரனிடம் நாம் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது. அது நியாயமும் இல்லை. அந்த பால் வடியும் முகத்தைப் பார்த்தால் யாருக்கும் கோபமே வராது.

சர்வ நாசம்
இப்படி ஜோ ரூட் தவிர, இங்கிலாந்து அணியில் யாருமே பெரிதாக பங்களிக்காத காரணத்தினால் தான், இங்கிலாந்து இவ்வளவு மோசமாக தோற்றிருக்கிறது. ஆனால், தோல்விக்கு அது மட்டும் காரணமல்ல. பும்ராவை வம்பிழுக்க நினைத்து, அவரை தேவையில்லாமல் கட்டம் கட்டி, அதனால் ஷமி, பும்ரா இருவரும் டென்ஷனாகி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வச்சு செய்துவிட்டனர். அதுமட்டுமின்றி, இளம் வீரர் சிராஜின் மிரட்டலான துடிப்பான பந்துவீச்சு, இங்கிலாந்தை சர்வ நாசம் செய்துவிட்டது. இவையெல்லாம் தான் அந்த அணியின் தோல்விக்கு காரணம்.

ஜெயிக்க முடியாது
இந்நிலையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறுகையில், "இங்கிலாந்து லார்ட்ஸில் நிறைய அற்புதமான கிரிக்கெட்டை விளையாடியுள்ளது. அதை மறந்துவிடக் கூடாது. ரிஷப் பண்ட் திங்களன்று அவுட்டாகி வெளியேறிய போது, இங்கிலாந்து 1-0 என்று வெற்றிப் பெறப் போகிறது என்று நாம் அனைவரும் நினைத்தோம். ஆனால், இந்தியா மீண்டு வந்து வெற்றிப் பெற்றிருக்கிறது. இந்தியா அணியின் பேட்டிங்கிலும் குறைபாடு உள்ளது. ஆனால், இங்கிலாந்தோ ஜோ ரூட் என்ற ஒற்றை பேட்ஸ்மேனை மட்டுமே நம்பியுள்ளது. பந்துவீச்சாளர்களுக்கு பல காயங்கள் ஏற்பட்டபோது ராபின்சன் ஒரு நம்பமுடியாத கண்டுபிடிப்பாக இருக்கிறார். ஆனால் அணியின் மற்றவர்களும் ரன்கள் எடுத்து, பவுலர்களுக்கு சப்போர்ட் செய்ய வேண்டும். ஜோ ரூட் மட்டும் அடிப்பார் என்று எதிர்பார்த்தால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜெயிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications