சின்னப்பசங்க கூட கிரிக்கெட் விளையாடுறதா?.. இது எங்களுக்கு அவமானம்..இலங்கை முன்னாள் வீரர் கடும் கோபம்
கொழும்பு: இந்தியாவுடனான தொடரில் இலங்கை பங்கேற்பதற்கு அந்நாட்டு முன்னாள் வீரர் அர்ஜுனா ரணதுங்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக இந்திய இளம் வீரர்களை தயார் செய்யும் விதமாக பிசிசிஐ இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. இந்தியாவின் சீனியர் வீரர்கள் பலர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதால் இலங்கை தொடரில் அதிகளவில் இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை தொடர்
இந்திய அணி வரும் ஜூலை 13ம் தேதி முதல் இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்கிறது. இந்த அணிக்கு சீனியர் வீரர்கள் ஷிகர் தவான் கேப்டனாகவும், புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட 20 வீரர்களுக்கும், வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேவ்தத் பட்டிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், நிதிஷ் ராணா, கிருஷ்ணப்பா கவுதம், சேட்டன் சக்காரியா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தங்களது முதல் சர்வதேச போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்திய அணி தயார்
இலங்கை தொடருக்காக கடந்த மாதம் மும்பையில் 14 நாட்கள் பயோ பபுளில் இருந்த இந்திய வீரர்கள் ஜூன் 28ம் தேதியன்று இலங்கைக்கு புறப்பட்டு சென்றனர். அங்குள்ள தனியார் ஹோட்டலில் தற்போது தங்கவைக்கப்பட்டு தற்போது முதற்கட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்ப்பு
இந்நிலையில் இந்த தொடருக்கு இலங்கை முன்னாள் வீரர் அர்ஜுனா ரணதுங்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்தியாவின் 'ஏ' இலங்கை அணிக்கு எதிராக விளையாட வந்திருப்பது எங்கள் நாட்டின் கிரிக்கெட்டிற்கு அவமானம். இந்த தொடருக்கு ஒப்புக்கொண்ட இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு கண்டனம் தெரிவிக்கின்றேன். இந்தியா தனது முதல் அணியை இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டு, பலவீனமான 'ஏ' அணியை சுற்றுப்பயணம் அனுப்பியுள்ளது. இது கொஞ்சம் கூட சரியில்லை எனத்தெரிவித்துள்ளார்.

சொதப்பல்
இலங்கை அணி தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடைசியாக விளையாடிய 5 டி20 தொடர்களிலும் தோல்விகளை சந்தித்து ரசிகர்களின் படு மோசமான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் இந்தியாவின் ஏ அணி கூட இலங்கையை வீழ்த்த வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications