பெங்களூரு: ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து மைக் ஹெசன் நீக்கப்பட்ட நிலையில், புதிய பயிற்சியாளராக ஆண்டி பிளவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணியால வலம் வரும் ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தவர் மைக் ஹெசன். 2019ஆம் ஆண்டு முதல் ஆர்சிபி பயிற்சியாளராக மைக் ஹெசன் செயல்பட்டு வரும் நிலையில், ஆர்சிபி அணி தொடர்ச்சியாக 3 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது அபாயகரமான அணியாக மாறியது. ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை.

இதனால் ஆர்சிபி அணியின் ரசிகர்கள் பலரும் விரக்தியடைந்தனர். 16 ஆண்டுகளாக ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாதது, அந்த அணி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆர்சிபி பயிற்சியாளர் மைக் ஹெசன் நீக்கப்படுவதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்தது. இவரின் ஒப்பந்தம் ஆகஸ்ட் மாத இறுதியுடன் முடிவடைவதால், அதன்பின் புதிய பயிற்சியாளரை நியமிக்க ஆர்சிபி நிர்வாகம் பரிசீலித்து வந்தது.
அதற்கேற்ப லக்னோ அணி நிர்வாகம் ஜஸ்டிங் லாங்கரை ஒப்பந்தம் செய்துவிட்டு, ஆண்டி பிளவர் உடனான ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. சர்வதேச அளவில் டி20 லீக் தொடர்களில் ஏராளமான கோப்பைகளை ஆண்டி பிளவர் வென்றிருப்பதால், அவரை ஒப்பந்தம் செய்ய ராஜஸ்தான், ஐதராபாத் உள்ளிட்ட அணிகள் வலை விரித்தன. இதனால் எந்த அணி அவரை ஒப்பந்தம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி பிளவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருடன் மூன்று ஆண்டுகள் வரை ஆர்சிபி அணியின் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மைக் ஹெசன் உடனான ஒப்பந்தம் முடிவடைந்த பின் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஆர்சிபி ரசிகர்களின் ஈசாலா கப் நம்தே கனவை அடுத்த ஆண்டில் ஆண்டி பிளவர் - டூ பிளசிஸ் கூட்டணி நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளின் போதும் ஆண்டி பிளவர் ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராக இருந்தார். அதேபோல் இங்கிலாந்து அணி முதல்முறையாக டி20 உலகக்கோப்பையை ஆண்டி பிளவர் பயிற்சியின் கீழ் வென்றது குறிப்பிடத்தக்கது.