தொடர்ந்து 4வது டெஸ்ட் தோல்வி... சிக்கலில் விராட் கோலி கேப்டன்ஷிப்
சென்னை: விராட் கோலி தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக நான்காவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.
சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து இந்திய அணியை முழுமையாக டாமினன்ட் செய்துவிட்டது. டாஸ் வென்றால் மேட்ச் ஜெயித்ததாக அர்த்தமாகாது என்று சொல்வார்கள். ஆனால், இங்கு டாஸ் ஜெயித்ததால் தான், இங்கிலாந்து இவ்வளவு ஆளுமையோடு வென்றுள்ளது என்று அடித்துக் கூறலாம்.
என்ன இருந்தாலும், ஜெயித்துவிட்டது. அதைத் தான் நாம் இப்போது பேச வேண்டும். முதலில் ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். இலங்கையை கபளீகரம் செய்து, இப்போது இந்திய அணியையும் 'ஹலோ கண்ணுக்குட்டி... ஆஸ்திரேலியாவில் எப்படி ஜெயிச்சீங்க' என்று கேட்டு வாஞ்சையோடு அடித்து துவைத்திருக்கிறது.

22 ஆண்டுகள் கழித்து
இந்திய அணியின் தோல்வி மூலம் சென்னை சேப்பாக் மைதானம் ஒரு புதிய சாதனையை பதிவு செய்திருக்கிறது. அதாவது, 1999ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில், 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற பிறகு, இப்போது தான் மீண்டும் சென்னையில் இந்தியா தோற்றுள்ளது.

கேப்டனாக அடுத்தடுத்து தோல்வி
அதுமட்டுமின்றி, விராட் கோலி தலைமையில் தொடர்ந்து நான்காவது தோல்வியை இந்தியா பதிவு செய்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக வெல்லிங்டன், கிறிஸ்ட்சர்ச்சில் தோற்ற பிறகு, ஆஸ்திரேலிய தொடரில் அடிலைட் போட்டியிலும் இவரது தலைமையில் இந்தியா தோற்றது. இப்போது சென்னையிலும் அது தொடர்கிறது.

இந்திய மண்ணில் சரண்டர்
அதேபோல், இந்திய மண்ணில் நான்கு வருடங்களுக்கு பிறகு, அதாவது 2017ல் ஆஸ்திரேலியாவிடம் சரண்டர் ஆன பிறகு இப்போது தான் உள்ளூர் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்கிறது. அதற்கு முன்பாக கடந்த 2012ல் தோனி தலைமையில் அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்றது.

அணியில் மாற்றம்
இரண்டாவது டெஸ்ட் போட்டியும் சென்னையில் தான் நடைபெறவுள்ளது. பிப்.13ம் தேதி துவங்கும் இந்தப் போட்டியில் சில மாற்றங்களை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. குறிப்பாக, குல்தீப் யாதவ் நிச்சயம் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications