AI மூலம் போலியான வீடியோ.. ரூ.2.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு கம்பீர் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு
டெல்லி: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர், தனது பெயர் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். AI மூலம் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் மற்றும் சட்டவிரோத பொருட்களைப் பயன்படுத்தி தனது உருவத்தைப் பயன்படுத்துவது தொடர்பான இந்த வழக்கில், அவர் ரூ.2.5 கோடி இழப்பீடு கோரியுள்ளார்.
கம்பீர் தாக்கல் செய்துள்ள சிவில் வழக்கில், AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் வீடியோக்கள் மற்றும் அனுமதியின்றி விற்பனை செய்யப்படும் பொருட்களைக் கொண்டு தனது அடையாளம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இது போன்ற செயல்களைத் தடுக்க நீதிமன்றம் நிரந்தரத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப் போன்ற முக்கிய சமூக வலைத்தளங்களில், AI மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோக்கள் பரப்பப்படுவதாக கம்பீர் குற்றம் சாட்டுகிறார். இந்த வீடியோக்கள், தான் எப்போதுமே சொல்லாத கருத்துகளைச் சொன்னது போல் சித்தரிப்பதாக அவரது புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, தான் ராஜினாமா செய்வதாக அறிவித்தது போல் காட்டப்பட்ட ஒரு வீடியோ 2.9 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், மூத்த கிரிக்கெட் வீரர்கள் உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தான் கருத்து தெரிவித்ததாகக் காட்டப்பட்ட மற்றொரு வீடியோவும் 1.7 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் தாண்டி, ஆன்லைன் சந்தைகளிலும் இந்த பிரச்சனை இருப்பதாக கம்பீரின் சட்டக் குழு தெரிவித்துள்ளது. அவரது பெயர் மற்றும் உருவத்தைப் பயன்படுத்தி, அனுமதியின்றி சுவரொட்டிகள் மற்றும் பிற வணிகப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கில் மொத்தம் 16 பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்களில் தனிநபர் சமூக வலைத்தளக் கணக்குகள், அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற மின் வணிக தளங்கள், மெட்டா, எக்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் யூடியூப்பை இயக்கும் கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் அடங்கும். நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த உதவும் வகையில், இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தொலைத்தொடர்புத் துறை ஆகியவையும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்திய பதிப்புரிமைச் சட்டம், வர்த்தக முத்திரைச் சட்டம் மற்றும் வர்த்தக நீதிமன்றச் சட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. AI-ஆல் உருவாக்கப்பட்ட வீடியோக்ள் பிரபலங்களின் "personality rights பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை டெல்லி உயர்நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள் அங்கீகரித்துள்ளன என்பதையும் இந்த வழக்கு மேற்கோள் காட்டுகிறது.
தனது அடையாளம் மேற்கொண்டு தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க ஒரு நிரந்தரத் தடை உத்தரவோடு, ரூ.2.5 கோடி இழப்பீடு கோரியுள்ள கம்பீர், தனது அனுமதியின்றி உருவாக்கப்பட்ட அனைத்து வீடியோக்களையும் நீக்குமாறும், அதன் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் குறித்த தகவல்களை வெளியிடுமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications