கம்பீர், விராத் கோலி அபார சதம் - தொடரை வென்றது இந்தியா
கொல்கத்தா: கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியா, இலங்கை இடையிலான நான்காவது ஒரு நாள் போட்டியில், இந்தியா அபார வெற்றி பெற்று, தொடரையும் வென்றது.
கொல்கத்தா ஈடன்கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று இந்தியா, இலங்கை இடையிலான நான்காவது ஒரு நாள் போட்டி நடந்தது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை வெல்லலாம் என்ற நிலையில் இந்தியாவும், வென்றே ஆக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் இலங்கையும் சந்தித்தன
இலங்கை கேப்டன் குமார் சங்ககாரா டாஸ் வென்று, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்களை மட்டும் இழந்து 315 ரன்களைக் குவித்தது. உபுல் தரங்கா சிறப்பாக ஆடி 118 ரன்களைக் குவித்தார். கேப்டன் சங்கக்காரா தன் பங்குக்கு 60 ரன்களைக் குவித்தார்.
டேஞ்சர்மேன் தில்ஷான், ஜெயசூர்யா ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் இந்தியா நிம்மதியடைந்தது. ஆனால் உபுல் தரங்கா பதம் பார்த்து விட்டார் இந்திய பவுலர்களை.
49.2வது ஓவரில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்த நிலையில், கடம்பியும், திலன் சமரவீராவும்
ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது மைதானத்தில் மின் விளக்குகள் திடீரென பழுதாகி, வெளிச்சம் குறைந்தது.
இதனால் போட்டி தடைபட்டது. வீரர்கள் அனைவரும் மைதானத்தை விட்டு வெளியேறினார்கள்.
பி்ன்னர் விளக்குகள் சரி செய்யப்பட்ட பின்னர் மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது. ஆட்ட நிறைவில், கடம்பி 15 பந்துகளில் 23 ரன்களும், சமரவீரா 7 பந்துகளில் 13 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்
இந்தியத் தரப்பில் ஜாகிர் கான், நேஹ்ரா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஹர்பஜன் சிங்குக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.
மிகப் பெரிய ஸ்கோரை பின்னர் இந்தியா துரத்த ஆரம்பித்தது. ஆனால் ஆரம்பத்திலேயே இந்தியாவுக்கு முக்கிய சரிவுகள் ஏற்பட்டன. சச்சினும் (8), ஷேவாக்கும் (10) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 23 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்திருந்தது அப்போது இந்தியா. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால் கம்பீரும், விராத் கோலியும் நங்கூரமிட்டு நின்று ரன் மழை பொழிய ஆரம்பித்தனர். குறிப்பாக கம்பீர் மிக கம்பீரமாக ஆடி 150 ரன்களைக் குவித்தார். விராத் கோலியும் தன் பங்குக்கு சதம் போட்டார். அவர் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கம்பீர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் திணேஷ் கார்த்திக் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் 48.1 ஓவர்களில் இந்தியா 3 விக்கெட்களை மட்டும் இழந்து 317 ரன்களைக் குவித்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
ஏற்கனவே இந்தியா டெஸ்ட் தொடரையும் வென்றிருந்தது. டுவென்டி 20 போட்டித் தொடரை சமன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இலங்கையுடனான தொடரை தோல்வியின்றி முடித்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
கம்பீர் நேற்று போட்ட சதம் அவரது ஏழாவது ஒரு நாள் சதமாகும். மேலும் ஒரு நாள் போட்டிகளில் 3000 ரன்களையும் நேற்றுடன் அவர் நிறைவு செய்தார்.
விராத் கோலி நேற்றுதான் தனது முதல் ஒரு நாள் சதத்தைப் பூர்த்தி செய்தார்.


Click it and Unblock the Notifications