மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகிய போது கேப்டன் ரோகித் சர்மா ஒரு கோரிக்கை வைத்திருந்தார். அதாவது இந்திய அணி அடுத்த ஐந்து மாதத்தில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
அதன் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டியில் தகுதி பெற்றால் விளையாட வேண்டி இருக்கிறது. இதனால் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் ராகுல் டிராவிட் 2025 ஆம் ஆண்டு வரை பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று ரோகித் வலியுறுத்தி இருந்தார்.

ஆனால் டிராவிட் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. இந்த நிலையில் கம்பீர் புதிய பயிற்சியாளராக பதவியேற்று இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்தியா தோல்வியை தழுவியது. இந்த சூழலில் கம்பீர் டெஸ்ட் போட்டிகளுக்கு சரியான பயிற்சியாளராக திகழ்வாரா? கம்பீர் ஒரு நல்ல டெஸ்ட் வீரராக இருந்தாரா என்பதை ராகுல் டிராவிட்டுடன் ஒப்பிட்டு தற்போது பார்க்கலாம்.
இந்திய அணிக்காக ராகுல் டிராவிட் 164 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஆனால் கம்பீர் வெறும் 58 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தான் விளையாடுகிறார். இது பார்த்தாலே டிராவிட் எவ்வளவு பெரிய அனுபவம் வாய்ந்த வீரர் என்று நன்கு தெரியும். கம்பீர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4154 ரன்கள் அடித்திருக்கிறார். ராகுல் டிராவிட் 13 ஆயிரத்து 288 ரன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்திருக்கிறார்.
கம்பீர் 9 சதம், 22 அரை சதம் ஆகியவற்றை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்திருக்கிறார். ஆனால் ராகுல் டிராவிட் 36 சதம், 63 அரை சதம் ஆகியவற்றை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளாசி இருக்கிறார். கம்பீரின் சராசரி 41.95 என்ற அளவில் இருக்கிறது. ராகுல் டிராவிட் சராசரி 52.31 என்ற அளவில் இருக்கிறது.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பீர் 206 ரன்கள் அடித்ததே, அவரின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். ராகுல் டிராவிட்டின் அதிகபட்ச ஸ்கோர் 270 ரன்கள் ஆகும். கம்பீர் இரண்டு முறை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட்டநாயகன் விருதை வாங்கி இருக்கிறார். ஆனால் டிராவிட் 11 முறை ஆட்டநாயகன் விருதை வாங்கி உள்ளார். கம்பீரை விட அனைத்திலுமே ராகுல் டிராவிட் தான் சிறந்த வீரராகவும் இருக்கின்றார்.
ஆனால் எப்போதுமே புள்ளி விவரங்கள் ஒருவரின் திறமையை முழுமையாக வெளிக் கொண்டு வராது. எவ்வளவு பெரிய பயிற்சியாளர்கள், தாங்கள் விளையாடிய காலத்தில் வீரராக சிறந்து செயல்பட்டது கிடையாது. அதேசமயம் வீரராக சிறந்து செயல்பட்ட வீரர்கள் பயிற்சியாளராக ஜொலித்தது கிடையாது. எனினும் அனுபவத்தில் டிராவிட் நல்ல பயிற்சியாளராக திகழ வாய்ப்பு இருந்திருக்கிறது.
எனினும் கம்பீர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் 2009 ஆம் ஆண்டு நம்பர் ஒன் டெஸ்ட் வீரராக இருந்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் நியூசிலாந்து மண்ணில் இரண்டு இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி அணியை காப்பாற்றி இருகிறார். இதனால் கம்பிருக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வராது என்று சொல்வதும் தவறாகும். இதனால் கம்பீர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை இரண்டு மூன்று டெஸ்ட் தொடருக்கு பிறகு தான் நாம் கணிக்க முடியும்.