பிளேயர்ஸை சும்மா மாத்திட்டே இருந்தா எப்படி.. மக்கள் மனதை அப்படியே பேசிய கங்குலி
Recommended Video

கோஹ்லிக்கு முன்னாள் கேப்டன் கங்குலி அட்வைஸ்- வீடியோ
பிர்மிங்காம்: இந்தியாவின் முன்னாள் கேப்டன் கங்குலி, மக்கள் மனதில் இருப்பதை அப்படியே பேசியுள்ளார். இந்திய அணியில் சமீப காலமாக வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இப்படி சுழற்சி முறையில் பயன்படுத்தாமல், நிலையான பதினோரு பேருக்கு வாய்ப்பளித்தால் தான் வீரர்களுக்கு அணி நிர்வாகம் மீது நம்பிக்கை வரும் என கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பின் சமூக வலைதளத்தில் தன் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார், கங்குலி. அவர் கூறியது, “ஒரு டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டுமென்றால் அனைவரும் ரன் குவிக்க வேண்டும். மற்ற பேட்ஸ்மேன்களும் சதமடிக்க வேண்டும். விராட் கோஹ்லி சிறப்பாக ஆடினார். இல்லையென்றால், இரண்டாவது நாளே இந்தியா ஆட்டத்தை விட்டு வெளியேறி இருக்கும்”

“ஒரு தோல்விக்கு கேப்டன் தான் பொறுப்பு என நான் நினைக்கவில்லை. நீங்கள் கேப்டன் என்றால் தோல்விக்கு எப்படி உங்களை விமர்சிக்கிறார்களோ, அதே போல வெற்றிக்கு உங்களை பாராட்டுவார்கள். கோஹ்லி மீது ஒரு விமர்சனம் என்னவென்றால், அவர் தனது பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும். அவர்களுக்கு அணியில் இடம் மறுக்கும் முன்பு, நிறைய நேரம் கொடுக்க வேண்டும். இங்கிலாந்து சூழ்நிலைகளில் சரியாக ஆடவில்லை என்ற சாக்குபோக்கை இனி சொல்லமுடியாது. நீங்கள் இங்கிலாந்துக்கு வந்தால் இதுதான் நடக்கும் என தெரியும்”
“கேப்டன் மற்ற வீரர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். அவர்களுடன் அமர்ந்து பேச வேண்டும். பயம் இல்லாமல் இங்கு ஆட வேண்டும் என கூற வேண்டும். தொடர்ந்து வீரர்களை மாற்றி வந்தால், அவர்கள் பயப்படுவார்கள் என்பது உண்மைதான். கடந்த வருடங்களில் அவர்கள் அணி நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள்” என கூறியுள்ளார் கங்குலி.
தற்போது கங்குலி சொல்வது, கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் இருக்கும் விஷயம் தான். கோஹ்லி கேப்டன் பதவி ஏற்ற பின், கடந்த ஆண்டில் இருந்து சில மாதங்களாக அனைத்து வகையான போட்டிகளிலும் வீரர்கள் சுழற்சி முறையில் அணியில் சேர்க்கப்படுகிறார்கள். இது உலகக்கோப்பைக்கான முன்னேற்பாடு என கூறப்பட்டாலும், வீரர்கள் தங்களுக்கு அணியில் இடம் உண்டா, இல்லையா என குழப்பத்தில் இருந்து வருகிறார்கள். இது மனதளவில் அவர்களை சோர்ந்து போக வைக்கிறது.
ஒரு வீரர் அரைசதம் அல்லது சதம் அடித்தாலும், ஒரு போட்டியில் 3 அல்லது 4 விக்கெட்கள் வீழ்த்தினாலும் அடுத்த தொடரில் தனக்கு இடம் இருக்குமா என்ற சந்தேகத்தோடு இருந்தால் அது அவர்களின் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை குறைக்கும். இதையெல்லாம் புரிந்து கொண்டு, இந்திய அணி இனியாவது வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்குமா என பார்க்கலாம்.
Story first published: Monday, August 6, 2018, 8:23 [IST]
Other articles published on Aug 6, 2018


Click it and Unblock the Notifications