டெல்லி: எஸ்ஏ20 லீக் தொடரில் ப்ரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி அணியின் இயக்குநராக கடந்த சீசனுக்கு முன் பணியாற்றிய் கங்குலி, தற்போது எஸ்ஏ20 லீக் தொடரில் பணியாற்ற உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சவுரவ் கங்குலி கடந்த சீசனுக்கு முன்பு வரை டெல்லி அணியின் இயக்குநராக பணியாற்றி வந்தார். தற்போது டெல்லி அணியின் பயிற்சியாளராக ஹேமங் பதானியும், இயக்குநராக வேணுகோபால் ராவும் நியமனம் செய்யப்பட்டனர். இதன்பின் டெல்லி மகளிர் அணியின் இயக்குநர் பொறுப்பை சவுரவ் கங்குலி ஏற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் எஸ்ஏ20 லீக் தொடர் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. அதில் ப்ரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜானத்தன் டிராட் பணியாற்றி வந்தார். தற்போது அவரின் ஒப்பந்தக் காலம் முடிவடைந்த நிலையில், சவுரவ் கங்குலி அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஜேஎஸ்டபிள்யூ விளையாட்டு மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநராக கங்குலி பணியாற்றி வந்தார். எஸ்ஏ20 லீக் தொடரில் முதல் சீசனில் கேபிட்டல்ஸ் அணி இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியை அடைந்தது. இதன்பின் அடுத்த சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை.
இந்த நிலையில் கங்குலியின் நியமனம் அந்த அணியின் தலை விதியை மாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் 2019ஆம் ஆண்டு முதல் கங்குலி பயணித்து வருகிறார். அந்த நிறுவனம் பல்வேறு லீக் தொடர்களில் முதலீடு செய்ய கங்குலி முக்கியக் காரணமாக அமைந்தார். ஏற்கனவே எஸ்ஏ20 லீக் தொடரில் இந்திய வீரர்கள் விளையாடுவதற்கு பிசிசிஐ ஒப்புதல் கொடுத்துள்ளது.
அதன்படி கடந்த சீசனில் தினேஷ் கார்த்திக், பியூஷ் சாவ்லா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இம்முறை எந்தந்த வீரர்கள் எஸ்ஏ20 லீக் தொடரின் ஏலத்தில் வாங்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் பயிற்சியாளராக கங்குலி இன்னும் பெரியளவில் நிரூபிக்காத சூழலில், அவருக்கான களம் இம்முறை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தனது திறமை நிரூபிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.