நல்லா அடிச்சு விளையாடுங்கப்பா.. ஷேவாக், கம்பீருக்கு கங்குலி அட்வைஸ்
கொல்கத்தா: இந்திய அணிக்குள் மீண்டும் திரும்பும் வகையிலான ஆட்டத்தையோ முயற்சியையோ இதுவரை ஷேவாக், கம்பீ்ர் ஆகியோர் எடுக்காதது வருத்தம் தருகிறது. அவர்கள் நன்கு அடித்து ஆடி நிறைய ரன்களைக் குவிக்க வேண்டியது அவசியம் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
யுவராஜ் சிங்குக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளதையும் அவர் பாராட்டியுள்ளார். யுவராஜ் சிங் தன்னை நிரூபிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு கிடைத்த பலனே இது என்றும் அவர் வர்ணித்துள்ளார்.
கங்குலி கேப்டனாக இருந்தபோதுதான் 2000மாவது ஆண்டில் ஒரு நாள் போட்டியில் யுவராஜ் சிங் சர்வதேச அளவில் அறிமுகமானார் என்பது நினைவிருக்கலாம்.

இந்தியாதான் பெஸ்ட்
கங்குலி அளித்துள்ள ஒரு பேட்டியில், இந்தியாதான் தற்போதைய நிலையில் நல்லதொரு அணியாக விளங்குகிறது. மேலும் யுவராஜ் சிங் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளதால் பேட்டிங் வரிசையில் 4வது இடம் பலமடைந்துள்ளது.

ஆஸ்திரேலியர்களை மிரட்டுவார்
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் வந்து விளையாடும்போது நிச்சயம் யுவராஜ் சிங் மிரட்டலாக இருப்பார்.

பாராட்டியே ஆக வேண்டும்
மீண்டும் அணியில் இடம் கிடைக்க யுவராஜ்சிங் மேற்கொண்ட முயற்சிகள், கடுமையான உழைப்பு பாராட்டுக்குரியது. கிட்டத்தட்ட 6 வார காலம், பிரான்ஸில் பயிற்சி எடுத்துள்ளார். இது ஆச்சரியப்படுத்துகிறது. மீண்டும் நல்ல பார்முக்கு அவர் திரும்பியுள்ளார். இந்திய அணிக்கு அவர் நல்ல பலம் சேர்ப்பார்.

ஷேவாக், கம்பீர் சரியில்லை
ஆனால் மீண்டும் அணிக்குத் திரும்பப் போராடும் ஷேவாக்கும் சரி, கெளதம் கம்பீரும் சரி, அதற்கான முயற்சிகளை முழுமையாக எடுப்பது போலத் தெரியவில்லை. தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை அவர்கள் வீணடிக்கிறாரக்ள். இந்திய ஏ அணியில் இடம் கிடைத்த நிலையில் அதை அவர்கள் சரிவரப் பயன்படுத்தவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது.

அடித்து ஆடுங்கள்...
ஷேவாக்கும், கம்பீரும் சிறப்பாக ஆட வேண்டும். நன்றாக அடித்து ஆட வேண்டும். திறமையை நிரூபிக்க வேண்டும். திறமைக்குத்தான் மதிப்பு கிடைக்கும்.

ஷிகர், ரோஹித் சர்மா பெரும் சவால்
தற்போது இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவனும், ரோஹித் சர்மாவும் சிறப்பாக ஆடி வருகிறார்கள். இது ஷேவாக், கம்பீருக்கு நிச்சயம் சவால்தான். எனவே தொடர்ந்து அவர்கள் ஆடி தங்களை நிரூபித்தால்தான் மீண்டும் அணிக்குத் திரும்ப வாய்ப்பு கிடைக்கும் என்றார் கங்குலி.


Click it and Unblock the Notifications