அதை மட்டும் தொடாதீங்க.. கேரி கிர்ஸ்டன் சொன்ன விஷயம்.. இந்தியா 2011 உலகக்கோப்பை வெல்ல காரணமே அதுதான்
சென்னை : இந்திய அணி 2011 உலகக்கோப்பை வென்ற போது அணியின் பயிற்சியாளராக இருந்தவர் கேரி கிர்ஸ்டன்.
அவர் அந்த உலகக்கோப்பை தொடரின் போது இந்திய வீரர்களுக்கு ஒரு உத்தரவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதை இந்திய வீரர்கள் பின்பற்றியதே எந்த குழப்பமும் இல்லாமல் இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது.

இந்திய அணியின் வெளிநாட்டு பயிற்சியாளர்களில் 2003 உலகக்கோப்பையில் அணியை வழிநடத்திய ஜான் ரைட்டுக்கு பின், அமைந்த சிறந்த பயிற்சியாளர் என்றால் அது கேரி கிர்ஸ்டன் தான்.
2011 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடந்தது. அதனால், இந்திய ஊடகங்கள் இந்திய வீரர்களை சுற்றி சுற்றி வந்தார்கள்.
அப்போது இந்திய வீரர்கள் சிறிய தவறு செய்தாலும், ஒரு போட்டியில் சொதப்பினாலும் மறுநாள் செய்தித் தாள்களில் அது குறித்து விமர்சனம் வரும். இப்போது போல அப்போது இணையதள ஊடகங்கள் அதிகம் இல்லை. செய்தித் தாள்களில் தான் கிரிக்கெட் வீரர்கள் குறித்த விமர்சனம் எழுதப்படும்.
அதனால், கேரி கிர்ஸ்டன் ஒரு விதிமுறையை உருவாக்கினார். 2011 உலகக்கோப்பை முடியும் வரை இந்திய வீரர்கள் எக்காரணம் கொண்டும் செய்தித் தாள்களை, பத்திரிக்கைகளை தொடவே கூடாது என்பதே அது. அதை இந்திய வீரர்கள் அனைவரும் பின்பற்றினர்.
அதன் காரணமாகவே அப்போது இந்திய அணியில் எந்த சர்ச்சைகளும், குழப்பங்களும் இன்றி முடிவுகள் எடுக்கப்பட்டு இந்தியா இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி உலகக்கோப்பை வென்றது.
கேரி கிர்ஸ்டன் தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர். அவருக்கு முதலில் பயிற்சியாளர் ஆகும் எண்ணமில்லை என்றாலும் அப்போது சுனில் கவாஸ்கர் வற்புறுத்தி கூறியதால் இந்திய அணியின் பயிற்சியாளராக வர சம்மதித்தார். ஆனால், பின் கேப்டன் தோனியுடன் இணைந்து மிக சிறப்பாக பணியாற்றியது பெரும் வரலாறு.
கேரி கிர்ஸ்டன் சென்ற பின் அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி முதல் இன்று ராகுல் டிராவிட் வரை இந்திய அணியின் பயிற்சியாளர்கள் குறித்து ஏதேனும் சர்ச்சைகள் அல்லது விமர்சனங்கள் வந்த வண்ணமே உள்ளன. ஆனால், கேரி கிர்ஸ்டன் எந்த சிக்கலும் இன்றி அணியை வழி நடத்தினார். கேப்டன் தோனியும் அதற்கு முக்கிய காரணம்.


Click it and Unblock the Notifications