இந்திய அணியின் தோல்விகளுக்கு காரணமே இவர்தான்.. முக்கிய நபரை வெளியேற்றிய கம்பீர், அகர்கர்
மும்பை: கடந்த 6 முதல் 8 மாதங்களாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில், அணியின் தலைமை பிசியோதெரபிஸ்ட் கமலேஷ் ஜெயினை பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது. தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோரின் கடுமையான அதிருப்தியைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற இலங்கை டெஸ்ட் தொடரின் அணியில் தேர்வு செய்யப்பட்ட பும்ரா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாய் சுதர்சன் பின்னர் காயம் குணமாகவில்லை எனக் கூறி அணியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த குளறுபடிகளுக்கு அணியின் தலைமை பிசியோதெரபிஸ்ட் கமலேஷ் ஜெயின் தான் காரணம் என பயிற்சியாளர் கம்பீர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், கடந்த 2 மாதங்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட இந்திய அணி வீரர்கள் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தனர். இதனால் இந்திய அணியை தேர்வு செய்வதில், எதிர்கால தொடர்களுக்கு திட்டமிடுவதில் பெரும் சிக்கல் எழுந்ததை தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் பிசிசிஐ-இடம் சுட்டிக் காட்டி இருந்தார். இதை அடுத்தே கமலேஷ் ஜெயினை பிசிசிஐ வெளியேற்ற முடிவு எடுத்துள்ளது.
முன்னணி வீரர்கள் அடிக்கடி காயமடைவது இந்திய அணியின் வெற்றி வாய்ப்புகளைப் பாதித்ததால், மருத்துவக் குழுவில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நோட்டீஸ் காலத்தில் இருக்கும் கமலேஷ் ஜெயினுக்குப் பதிலாக புதிய பிசியோதெரபிஸ்ட் விரைவில் நியமிக்கப்படுவார் என பிசிசிஐ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதற்கிடையே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் தொடங்குகிறது. இதற்காக டெல்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற தீவிர வலைப்பயிற்சியில், காயம் குணமாகித் திரும்பிய வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் பயிற்சியாளர் சாய்ராஜ் பகதுலே மேற்பார்வையில் பந்துவீச்சு பயிற்சியை மேற்கொண்டனர். காயத்தில் இருந்து முழுமையாக மீண்டுள்ள ஜஸ்பிரித் பும்ரா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் இன்று முதல் பயிற்சியில் இணைகின்றனர்.
துலீப் டிராபி இறுதிப் போட்டியில் விளையாடிய இஷான் கிஷன், வைபவ் சூர்யவன்ஷி மற்றும் திலக் வர்மா ஆகியோர் சென்னை போட்டியை முடித்துவிட்டு வரவுள்ளதால், நேற்று 10 வீரர்கள் மட்டுமே பயிற்சியில் பங்கேற்றனர். காயத்தால் விலகிய ஹர்ஷித் ரானாவுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தாக்கூர் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஆகியோர் அக்சர் படேல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரின் சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு பேட்டிங் பயிற்சி செய்தனர்.


Click it and Unblock the Notifications

