“கம்பீரின் செல்லப்பிள்ளைகள் வந்துவிட்டனர்”.. இந்திய டி20 அணித் தேர்வு குறித்து பத்ரிநாத் விமர்சனம்
மும்பை: ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கான இந்திய அணியின் தேர்வு குறித்து கௌதம் கம்பீரைத் தாக்கி முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அணியில் 'பயிற்சியாளரின் செல்லப்பிள்ளைகள்' மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் விமர்சித்து இருக்கிறார்.
டெல்லியில் செப்டம்பர் 13 அன்று தொடங்கவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய பத்ரிநாத், "இந்த அணியைப் பார்த்ததும் முதலில் தோன்றுவது பயிற்சியாளரின் செல்லப்பிள்ளைகள் மீண்டும் வந்துவிட்டனர் என்பதுதான். வாஷிங்டன் சுந்தருக்கு இந்திய கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

மேலும் நிதிஷ் குமார் ரெட்டி குறித்துப் பேசிய பத்ரிநாத், "என்னால் நிதிஷ் ரெட்டியை ஒரு சிறந்த பந்துவீச்சாளராக மதிப்பிட முடியாது. அவர் ஒரு பேட்டர் மட்டுமே. பந்துவீச்சில் அவரிடம் அத்தகைய திறமை இல்லை" என்று கூறினார். இந்தத் தொடரில் காயம் காரணமாக விலகியிருந்த ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா ஆகியோரும் தங்களது உடற்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் இந்த தொடரில் விளையாட வாய்ப்பு உள்ளது.
பும்ராவின் வருகையை பற்றி மட்டுமே பத்ரிநாத் பாராட்டி பேசினார். இது குறித்து அவர் பேசுகையில், "பும்ராவின் வருகை அணிக்கு மிகப்பெரிய பலம். அவரே கௌதம் கம்பீர் மற்றும் தேர்வு குழுவினரிடம் பேசி, தான் விளையாட விரும்புவதாகக் கூறியிருக்கலாம். காயம் காரணமாக கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து ஒருநாள் தொடருக்குப் பிறகு அவர் விளையாடவில்லை. இதனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் விளையாட விரும்புவது நல்ல விஷயம்" என்றார்.
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து டி20 தொடர்களில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தொடர் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications

