சாஹலுக்கு அநீதி செய்த ஹர்திக் பாண்ட்யா.. முக்கிய வாய்ப்பை தவறவிட்டுடாரே.. கம்பீர் கடும் ஆவேசம்!
லக்னோ: நியூசிலாந்து அணியுடனான 2வது டி20 போட்டியின் போது சுழற்பந்துவீச்சாளர் யுவேந்திர சாஹலுக்கு ஹர்திக் பாண்ட்யா அநீதி செய்துவிட்டதாக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விளாசியுள்ளார்.
இரு அணிகளும் லக்னோவில் மோதிய 2வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு வெற்றியை பதிவு செய்தது. மேலும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1 - 1 என சமன் செய்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 99 ரன்களை குவித்தது. இதன் பின்னர் ஆடிய இந்திய அணி கடைசி ஓவர் வரை பரபரப்பாக கொண்டு சென்று 19.5 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி கண்டது.

சிறப்பான பவுலிங்
லக்னோ மைதானத்தில் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பிட்ச்-ல் ஸ்பின் இருந்தது. அதனை சரியாக பயன்படுத்தி நியூசிலாந்தின் அஸ்திவாரத்தை சரித்தவர் யுவேந்திர சாஹல் தான். அவர் வீசிய முதல் ஓவரின் 3வது பந்திலேயே டேஞ்சர் பேட்ஸ்மேன் ஃபின் ஆலன் 12 ரன்களுக்கு அவுட்டானார். அவர் 2 ஓவர்களை வீசியும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து விக்கெட்டை எடுத்திருந்தார்.

சாஹல் புறக்கணிப்பு
ஆனால் அதிர்ச்சி தரும் வகையில் சாஹலுக்கு அதன் பின்னர் வாய்ப்பே கொடுக்கப்படவில்லை. ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், தீபக் ஹூடா ஆகிய 3 பேர் மட்டுமே முழுமையாக 4 ஓவர்களை வீசினார்கள். வாஷிங்டன் சுந்தரும் 3 ஓவர்களை மட்டுமே வீசினார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பார்ட் டைம் பவுலர் ஹூடா 4 ஓவர்களை வீசிய போது, சாஹல் 2 ஓவர்களை வீசியது தான்.

கம்பீரின் ஆவேசம்
இந்நிலையில் இதற்கு கம்பீர் ஆவேசமடைந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஸ்பின்னர்களுக்கு மிக சாதகமான இந்த களத்தில், சாஹல் தான் முதன்மை தேர்வு பவுலராக இருக்க வேண்டும். 2 ஓவர்களை வீசி 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு முக்கிய விக்கெட்டையும் வீழ்த்தியவருக்கு, மீதம் 2 ஓவர்களை கொடுக்காமல் போனதில் அர்த்தமே இல்லை.

டார்கெட்டை குறைக்கலாம்
அர்ஷ்தீப் சிங், ஷிவம் மாவி போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் தான். ஆனால் குறைந்தது கடைசி ஓவரையாவது சாஹலிடம் கொடுத்திருக்க வேண்டும் அல்லது அதற்கு முன்னதாகவே தந்திருக்கலாம். ஒருவேளை அப்படி செய்திருந்தால் நியூசிலாந்து அணியை 80 அல்லது 85 ரன்களுக்கெல்லாம் சாஹல் சுருட்டியிருப்பார். ஆனால் ஹுடாவுக்கு 4 ஓவர்களை தந்து பாண்ட்யா தவறு செய்துவிட்டார் என கம்பீர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications