டெல்லி: முன்னாள் இந்திய கேப்டனும், தேர்வுக்குழுத் தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது யூட்யூப் பார்வையை ஏற்றுவதற்காக இளம் வீரர் குறித்து வாய்க்கு வந்தபடி பேசி இருக்கிறார் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தனது கோபத்தை கொட்டி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.
அப்போது இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவின் தேர்வு குறித்து ஸ்ரீகாந்த் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு, "உங்கள் யூட்யூப் சேனலை வளர்ப்பதற்காக, 23 வயது வீரரான ஹர்ஷித் ராணாவை பலிகடா ஆக்குவது வெட்கக்கேடானது" என்று கம்பீர் கோபத்தை வெளிப்படுத்தி, கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய கிரிஸ் ஸ்ரீகாந்த், "ஹர்ஷித் ராணா, கௌதம் கம்பீருக்கு 'ஆமாம் சாமி' (Yes Man) போடுபவர் என்பதால் மட்டுமே இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்" என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கம்பீரின் கீழ் ஹர்ஷித் ராணா விளையாடியதைச் சுட்டிக்காட்டி, இந்தத் தேர்வு ஒருதலைப்பட்சமானது என்று அவர் விமர்சித்திருந்தார்.

ஸ்ரீகாந்த்தின் இந்தக் குற்றச்சாட்டுக்கு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த கௌதம் கம்பீர், தனது வழக்கமான ஆக்ரோஷத்துடன் பதிலடி கொடுத்தார்.
"இது மிகவும் வெட்கக்கேடானது. நான் நேர்மையாகச் சொல்கிறேன். உங்கள் யூடியூப் சேனலுக்காக ஒரு 23 வயது இளைஞனை நீங்கள் குறிவைப்பது அநியாயம். ஏனென்றால், அவனது தந்தை ஒரு முன்னாள் கிரிக்கெட் வாரியத் தலைவரோ, முன்னாள் கிரிக்கெட் வீரரோ, அல்லது ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியரோ அல்ல. அவன் இதுவரை விளையாடிய கிரிக்கெட் அனைத்தும், அவனது சொந்த முயற்சியால் மட்டுமே. இனியும் அப்படித்தான் விளையாடுவான்," என்று கம்பீர் காட்டமாகத் தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய கம்பீர், ஹர்ஷித் ராணாவின் மனநிலை குறித்துக் கவலை தெரிவித்தார். "நீங்கள் ஒரு வீரரின் செயல்திறனை விமர்சிக்கலாம். ஆனால், 23 வயது இளைஞனைப் பார்த்து இப்படிப் பேசினால், அதை சமூக வலைதளங்கள் மேலும் பெரிதாக்கும்போது, அவனது மனநிலையை யோசித்துப் பாருங்கள்," என்று அவர் எச்சரித்தார்.
கம்பீர் ஸ்ரீகாந்த்திற்கு ஒரு நேரடி சவாலையும் விடுத்தார். "ஹர்ஷித் ஒன்றும் 33 வயது ஆன வீரர் அல்ல. நீங்கள் என்னை விமர்சிக்கலாம், அதை என்னால் சமாளிக்க முடியும். உங்களுக்கு யாரையாவது குறிவைக்க வேண்டுமானால், என்னைக் குறிவையுங்கள், அது பரவாயில்லை. ஆனால், ஒரு இளம் வீரனைக் குறிவைக்காதீர்கள்" என்று பொங்கினார் கம்பீர்.
கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, ஹர்ஷித் ராணா 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒரு முன்னாள் கேப்டனுக்கும், தற்போதைய பயிற்சியாளருக்கும் இடையே வெடித்துள்ள இந்த மோதல், இந்தியக் கிரிக்கெட்டில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.