உங்க வேலை என்னவோ... அதை மட்டுமே பாருங்க... தோனி விவகாரத்தில் மூச்..!! ஐசிசியை பங்கம் செய்த அவர்
டெல்லி: போட்டிகளை சிறந்த முறையில் நடத்த வேண்டியதுதான் ஐசிசியின் வேலையே தவிர, யார் என்ன லோகோ பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்பதல்ல என்று தோனிக்கு ஆதரவாக களம் புகுந்திருக்கிறார் கவுதம் கம்பீர்.
உலக கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்திய அணி தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஆடிய முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று வெற்றியுடன் தொடரை தொடங்கியது. இந்த உலக கோப்பை தொடரில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தலயுமான தோனி, தனது விக்கெட் கீப்பிங் க்ளவுசில் "இந்தியன் பாரா ஸ்பெஷல் போர்சின் குறியீட்டை பயன்படுத்தினார்.
இது தான் தற்போது ஹாட் டாபிக்காக உருவாகி இருக்கிறது. ஐசிசி விதிப்படி அரசியல், மதம், ராணுவம் சார்ந்த குறியீடுகளை வீரர்கள் எந்த வகையிலும் களத்தில் பயன்படுத்தக்கூடாது. அதனால் தோனியின் விக்கெட் கீப்பிங் க்ளவுசிலிருந்து அந்த குறியீட்டை நீக்க தோனிக்கு அறிவுறுத்துமாறு பிசிசிஐக்கு ஐசிசி அறிவுறுத்தியிருந்தது.

தோனிக்கு சப்போர்ட்
ஆனால்.. இந்த விவகாரத்தில் ரசிகர்களும், பல்வேறு பிரபலங்களும் தோனியின் பக்கம் நின்றனர். அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். விளையாட்டு துறை அமைச்சர் கிரன் ரிஜ்ஜூவும் தோனிக்கு ஆதரவாக நின்றார். பிசிசிஐயும் தோனிக்குதான் ஆதரவு. அவரது க்ளவுசில் பாலிடன் குறியீட்டை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று ஐசிசியிடம் அனுமதி கோரியது.

அனுமதி இல்லை
ஆனால் ஐசிசி அனுமதி தரவில்லை. தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக தோனியின் க்ளவுசில் இருந்த குறியீடு, அடுத்த வரக்கூடிய போட்டிகளில் இருக்கக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து முன்னாள் வீரரும் எம்பியுமான கவுதம் கம்பீர் ஐசிசியை வெளுத்து வாங்கியிருக்கிறார்.

ஐசிசியின் வேலை
அவர் கூறியதாவது: போட்டிகளை சிறப்பான முறையில் நடத்த வேண்டியது தான் ஐசிசியின் வேலையே தவிர, யார் என்ன லோகோ பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்பதல்ல. முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமான ஆடு களங்களாக இல்லாமல்,பவுலர்களுக்கும் சாதகமான ஆடுகளங்களை அமைப்பது தான் ஐசிசியின் வேலை.

பெரிதுபடுத்த வேண்டாம்
எனவே, அந்த வேலையை சரியாக பார்க்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, இது போன்ற முக்கியத்துவம் இல்லாத விஷயத்தை பெரிதாக்கக் கூடாது என்று கம்பீர் தெரிவித்துள்ளார். தோனிக்கு தற்போது ஆதரவு பெருகியுள்ளதால், அடுத்தகட்டமாக ஐசிசி என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்று தெரிய வில்லை.


Click it and Unblock the Notifications