Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லாம் கம்பீரால் தான் .. இதுவரை இந்திய டெஸ்ட் அணிக்கு இப்படி ஒரு நிலைமை வந்ததே இல்லை!

லீட்ஸ்: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தற்போது மிகப்பெரும் அழுத்தத்தில் இருக்கிறார். இந்திய அணியின் எந்த ஒரு வீரரையும் விட, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வி கௌதம் கம்பீருக்கே அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனெனில், கௌதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பின் அவருக்கு அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டது. அவரது விருப்பத்திற்கேற்ப அணியின் கேப்டன் யார் என முடிவு செய்வது முதல், அணியின் வீரர்களை முடிவு செய்வது வரை அனைத்து அதிகாரமும் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

Gautam Gambhir Indian Cricket Team Test Cricket Coach

அவரது மறைமுக அழுத்தத்தால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணியை முன்னின்று வழிநடத்த வேண்டிய பொறுப்பு அவருக்கு அதிகமாக இருந்தது. புதிய கேப்டனாக சுப்மன் கில்லை நியமித்து இந்திய அணியை இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஆட வைத்ததில் கௌதம் கம்பீரின் பங்கு மிகவும் அதிகம். அப்படி என்றால், தோல்விக்கும் அவரே பொறுப்பேற்க வேண்டும்.

இதில் மோசமான விஷயம் என்னவெனில், இந்திய அணி கடைசியாக ஆடிய ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றிருக்கிறது. கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்த பின் விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளில் மூன்று வெற்றிகளை மட்டுமே பெற்றிருக்கிறது. அதில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு வெற்றிகளை நீக்கி விட்டுப் பார்த்தால், ஒன்பது போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றிருக்கிறது.

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய முன்னணி அணிகளுக்கு எதிராக இந்தத் தோல்விகள் கிடைத்துள்ளன. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரே ஒரு ஆறுதல் வெற்றி மட்டுமே இந்திய அணி பெற்று இருக்கிறது.

இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது மிக மோசமான சூழலாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு முன் 1967 முதல் 1968 வரையிலான காலகட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து ஏழு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தது. ஆனால் அப்போது இருந்த இந்திய அணிக்கு அதிக கிரிக்கெட் அனுபவமும் இல்லை. இப்போது இருக்கும் வசதிகள் அப்போது இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அப்போதைய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களின் வாழ்வாதாரத்திற்கு வேறு ஒரு வேலையை செய்து கொண்டு கிரிக்கெட் விளையாடியவர்கள். ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. இந்திய கிரிக்கெட் உலகின் முன்னணி கிரிக்கெட் வாரியமாகப் பார்க்கப்படுகிறது. உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் வீரர்களாக இந்திய வீரர்கள் உள்ளனர்.

கிரிக்கெட்டில் என்ன ஒரு புதிய வசதி அல்லது தொழில்நுட்பம் வந்தாலும் அது இந்தியாவில் உடனுக்குடன் செயல்பாட்டுக்கு வந்துவிடுகிறது. இந்திய அணியில் இடம் இல்லாமல் மாற்று வீரர்களாகவும், ரஞ்சி டிராபியில் மட்டும் விளையாடும் வீரர்களாகவும் இருக்கும் பலரும் கூட மிகவும் திறமைசாலிகளாக இருக்கின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இந்திய அணி தான் விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றிருக்கிறது. இதுதான் கௌதம் கம்பீருக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தால், நிச்சயம் கௌதம் கம்பீரின் பதவி தப்புவது மிகவும் கடினம்.

Story first published: Thursday, June 26, 2025, 17:41 [IST]
Other articles published on Jun 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+