5 நாள் ஓய்வு தப்பு, வார்ம் அப் கேமில் 18 பேர் ஆடியது தப்பு.. அபிராமி அபிராமி.. கவாஸ்கர் புலம்பல்!
டெல்லி : இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதற்கு முக்கிய காரணம் சரியான பயிற்சி இல்லாதது தான் என கூறியுள்ளார் கவாஸ்கர். இது குறித்து அவர் “இந்தியா டுடே” தொலைக்காட்சியில் விரிவாக பேசி இருக்கிறார்.
முதல் போட்டியின் தோல்வி எதனால் ஏற்பட்டது என கூறிய கவாஸ்கர், சில முக்கிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இருக்கிறார். இந்திய அணி இங்கிலாந்து நாட்டில், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளிலும், அயர்லாந்தில் 2 டி20 போட்டிகளிலும் ஆடியது.
மொத்தமாக இங்கிலாந்து சூழ்நிலைகளில் 8 நாட்கள், அதுவும் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாடி உள்ளது.

5 நாட்கள் ஒய்வு தவறு
இந்த நிலையில், ஒரு நாள் போட்டிகள் முடிந்த உடன் வீரர்களுக்கு ஐந்து நாள் ஓய்வளிக்கப்பட்டு அனைவரும் ஐரோப்பா சுற்றுப்பயணத்தில் மூழ்கினர். இதை சுட்டிக்காட்டிய கவாஸ்கர், ஒருநாள் போட்டிகளில் இருந்து டெஸ்ட் போட்டிகளுக்கு மாறும் வகையில் வீரர்களுக்கு ஒய்வு தேவைதான். ஆனால், இப்படி ஒரேயடியாக ஐந்து நாட்கள் கொடுப்பது தவறு என கூறியுள்ளார். மூன்று நாட்கள் ஒய்வு, பின் பயிற்சி, பின் மீண்டும் மூன்று நாட்கள் ஒய்வு என கொடுத்து இருக்க வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளார்.

பயிற்சி ஆட்டத்தில் 18 பேரா?
அடுத்தது, இந்தியா பயிற்சி ஆட்டத்தில் ஆடிய விதம் பற்றி விமர்சனம் வைத்திருக்கிறார். இந்திய அணி ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் தான் ஆடியது. முதலில் நான்கு நாள் இருந்த போட்டியை, மூன்று நாட்களாக குறைத்தது. பின்பு, அந்த போட்டியில் அணியில் இருந்த 18 உத்தேச வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அனைவரும் ஆடியிருக்க வேண்டும்
இதை குறிப்பிட்ட கவாஸ்கர், இந்திய அணி இரண்டு மூன்று நாள் போட்டியிலும், ஒரு முதல் தர போட்டியிலும் முழுமையாக ஆடி இருக்க வேண்டும். அதுவும் சரியான 11 வீரர்களை கொண்டு ஆடி இருக்க வேண்டும். ஆனால், கிடைத்த ஒரு பயிற்சி ஆட்டத்தையும், இந்திய அணியின் தனிப்பட்ட பயிற்சி போல 18 வீரர்களையும் பயன்படுத்தி வீணாக்கியுள்ளது என குறிப்பிட்டார்.

ஒரு மாதம் இருந்தால் போதுமா?
மேலும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் கவாஸ்கர். இங்கிலாந்தில் ஒரு மாதம் இருந்து விட்டோம் என கூறுகிறார்கள். ஆனால், ஒரு மாதமாக அவர்கள் வெள்ளைப் பந்தில் குறைந்த ஓவர்களை கொண்ட போட்டிகளில் ஆடினார்கள். அந்த போட்டிகளில் பேட்டை சுழற்றும் வேகம் அதிகம். அது டெஸ்ட் போட்டிக்கு பயிற்சி ஆகாது என கூறியுள்ளார். இறுதியாக, கோஹ்லி 50 நாட்கள் கூட பயிற்சி இல்லாமல் வந்து சதம் அடிப்பார். ஆனால், மற்ற வீரர்களுக்கு நிச்சயம் பயிற்சி தேவை என கூறினார்.
கவாஸ்கர் சொல்வதும் நியாயமாகத்தான் இருக்கிறது. இந்திய அணி நிர்வாகம் தன் தவறை உணருமா?


Click it and Unblock the Notifications